பசுபதியின் கருத்துகளை தவறாக மேற்கோள் காட்டப்பட்டு, தவறாக புரிந்துகொள்ளப்பட்டது

Denisan mtgகபாலி திரைப்படம் நிழலா, நிஜமா? என்ற கேள்விகளின் வழி இந்திய சமூகத்தில் உள்ள சமூக பிரச்சனைகளின் ஆய்வு களமாக ஒரு நிகழ்ச்சியை டெனிசன் ஜெயசூரியா நடத்தினார். அதில் பசுபதி சிதம்பரம், உதவும் கரங்கள் முரளி மற்றும் சினிமா விமர்சகர் முனைவர் அட்லி ஆகியோர் வருகையாளர்களாக கலந்து கொண்டனர்.

அதில் கலந்து கொண்ட அலியா அஸ்கார் என்ற மலேசியாகினி  நிருபர் வெளியிட்ட ஒரு தப்பான கருத்தை உறுதி செய்யாமல், தன்னை ஒரு முன்னிலை நாளேடு என்று மார்தட்டும் ஒரு நாளேடு அந்தத் தப்பான கருத்தோடு பொய்களையும் கலந்து பல அவதூறான செய்திகளை பசுபதி சிதம்பரம் அவர்களுக்கு எதிராக வெளியிட்டது.

இதற்கிடையில், மலேசியாகினி தவறாக  வெளியிட்ட கருத்தை மீட்டுக்கொண்டுள்ளது. ஆனால், இந்த குறிப்பிட்ட நாளேடு வாசகர்களுக்கு உண்மையைச் சொல்லும்  தைரியமற்ற நிலையில் தொடர்ந்து பொய்யில் பிதற்றுவது அதன் ஆசிரியர் குழுவின் மலட்டுத்தன்மையையும் மானங்கெட்டதன்மையையும் காட்டுகிறது.

பொய்யான செய்தியை பிரசுரம் செய்து,  அதையே வைத்து பொய்யான கருத்துக்கணிப்பை உருவாக்கி, ஒரு பொய்யை மெய்யாக்கத்  துடிக்கும் இந்த நாளிதழுக்கு வெகுவிரைவில் மக்களின் செருப்படிதான் கிடைக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது.

அந்த நாளேட்டின் கேவலமான நடத்தையை அம்பலப்படுத்தும் வகையில் அந்த கபாலி களத்தை ஏற்பாடு செய்த குழுவினர் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை அமைந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

“ஆகஸ்ட் 25, 2016 இல், மலேசிய தேசியப் பல்கலைக்கழக, இன ஆய்வுக் கழகத்தின் சமகாலத்திய மலேசிய இந்திய நுண்ணாய்வுக் குழு, பெட்டாலிங் ஜெயா ஆசிய பசிபிக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த தமிழ்ப்படம் கபாலி பற்றிய கலந்துரையாடலில் ஒரு வருகையாளராக கலந்து கொண்ட திரு சி. பசுபதி என்ன கூறினார் என்பது பற்றி அவர் அளித்த விளக்கத்தை நாங்கள் செவிமடுத்தோம்.”

“தமிழ்ப்பள்ளிகள் குண்டர்தனத்தின் பிறப்பிடம் அல்லது குண்டர் கும்பலை உருவாக்கும் தலம்”  என்று திரு பசுபதி கூறவில்லை என்பதை எங்களால் உறுதிப்படுத்த இயலும்”, என்று அக்குழு கூறுகிறது.

மேலும், “சமூக பொருளாதார நிலையில் பலவீனமான  பின்னணியில் உள்ளவர்களின் குழந்தைகள், எந்த வகைப் பள்ளிக்குச் சென்றாலும், அவர்கள்  குண்டர்தனத்தின் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை பற்றிய  அவரது பகிர்வு தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்பதோடு,  மலேசியாவில் பாதிப்புக்கு உள்ளாகும் அபாய நிலையில் உள்ள  இந்திய இளைஞர்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக திரு. எஸ். பசுபதியும் மைஸ்கில்ஸ் அறவாரியமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டுவதாக அந்தக் கூட்டறிக்கை கூறுகிறது.

அதோடு, “மலேசியாவிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் தேசிய பரம்பரைச் சொத்து என்பதையும் அது மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான  ஒரு பண்பாட்டு அடையாளம்  என்பதையும் வலியுறுத்தி பிரகடனம் செய்வதற்காக நாங்கள் 2016  ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று   நண்பகலில் சந்தித்தோம்.”

“சமூகப் பிரச்சனைகளைக் களைவதற்கு அரசாங்கமும் சமூகமும் ஆற்றிய பங்கை நாங்கள் உறுதி செய்கிறோம்” என்று கூறும் அந்தGroup Photo1 அறிக்கை  மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர்   டத்தோ எ. வைத்திலிங்கம்,  முனைவர் டத்தோ என். எஸ் இராஜேந்திரன், எம். முத்துசாமி,  பேராசிரியர் டாக்டர் கே. எஸ். நாதன் மற்றும் டத்தோ டாக்டர் டெனிசன் ஜெயசூரியா, மற்றும் எஸ். சுப்பிரமணி, கா. ஆறுமுகம் ஆகியோரால் வெளியிடப்பட்டது.  இதில் பசுபதி அவர்கள் விளக்கம் அளித்தார்.

மேலும், அந்த அறிக்கை, “அபாய நிலைக்கு உள்ளாகும் இந்திய இளைஞர்களைப் பாதிக்கும் அடிப்படைக் காரணங்கள் மீது கவனம் செலுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுமாறு நாங்கள் சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம். சமூகமும் நாடும் மேம்பட்ட நிலையை அடைவதற்கான ஆற்றல் மிக்க தீர்வுகளின் மீது தொடந்து கவனம் செலுத்துவதற்காக அனைவரையும் முன்நோக்கிச் செல்லுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”, என்கிறது.

“தமிழ்ப்பள்ளிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை. நான் அதைச் செய்யவே மாட்டேன். நான் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நிலை ஏற்பட்டிருந்தால் அது வருத்தத்திற்குரியதாகும்”, என்ற பசுபதியின் நிலைப்பாட்டையும்  அவ்வறிக்கை வெளியிட்டுள்ளது .