தலைவிதியா திட்டமிட்ட ஏமாற்று சதியா ? கேள்விக்குறியாகும் மலேசியாவின் தமிழ் கல்வி எதிர்காலம்..!

makkalsakthi2கோலாலம்பூர், செப்டம்பர் 20 :

தமிழ் கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. தொடக்கப் பள்ளிகளில் 6 ஆம் ஆண்டு வரையில் அடிப்படை தமிழ் கல்வியை பயிலும் மாணவர்கள், இடைநிலைப்பள்ளிகளுக்குச் சென்றதும் தமிழ்மொழி கல்வியைத் தொடர்ந்து பயில்வது சந்தேகம்தான் என மக்கள் சக்தி தலைவர் டத்தோ ஆர்.எஸ். தனேந்திரன் கூறியுள்ளார்.

இதில் பல்கலைக்கழகம் வரையில் தமிழ் பயில்வது பாரட்டப்பட வேண்டிய ஒன்றுதான். நமது மொழியை தொடர்ந்து பேண ஒரு தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில்,

*தமிழ் கல்வி பயில்வதை அலட்சியம் செய்யும் தரப்பும் இருக்கவே செய்கிறது* என அவர் சுட்டிக் காட்டினார்.

மலேசியாவில் தமிழர்களின் கலாச்சாரம் மெதுமெதுவாக சரிந்து வருகிறது. இன்றைய இளையோரில் பெரும்பாலானோர் தங்களின் கலை கலாச்சாரங்களை முழுமையாக அறிந்திருக்காத சமூகமாக இருக்கின்றனர்.

தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். இன்னும் பலர் தமிழ் பேசவே தெரியாமலும் உள்ளனர். இது மிகவும் கவலைக்குரியது. கவனத்திற் கொள்ள வேண்டியதும் கூட.

அடுத்த தலைமுறை

இந்நிலை தொடர்ந்தால், மலேசியாவில் அடுத்த இந்திய தலைமுறை, *தமிழ் மறந்த சமூகமாக மாறி விடக் கூடும் என தனேந்திரன் எச்சரித்துள்ளார்.* இந்நிலை மாற வேண்டும், மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழர்களிடையே நிலவும் தமிழ் கல்வி இடைவெளி முற்றாக களையப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதன் அடிப்படையிலேயே தமிழ் இடைநிலைப்பள்ளி தோற்றுவிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் முழு நேரமும் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இடைநிலைப்பள்ளிகளில் சில மணி நேரம் அல்லது பள்ளி நேரத்திற்குப் பின்னரே குறிப்பிட்ட நேரத்திற்கு கற்றுத் தரப்படுகிறது. அதனை கற்றுக் கொள்வதும் கட்டாயமாக்கப்படாத நிலையில், தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

முற்றாக தமிழ் கல்வி சுவடு இன்றி காணாமல் போகும் முன், தமிழ் கல்வியை தொடரும் முயற்சிகள் தேவை என தனேந்திரன் தி மலேசியன் டைம்ஸ்சுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டார். தமிழ் கல்வியின் எதிர்காலம் குறித்து அக்கறை கொண்டதால் தான், 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழ் இடைநிலைப்பள்ளி தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது உட்பட 5 முக்கிய தீர்மானங்களை மக்கள் சக்தி முன்வைத்தது என்றாரவர்.

தமிழ் இடைநிலைப்பள்ளி

அவ்வகையில், 2014 ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட்டில் *தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்படுவதற்கு ஏதுவாக 10 ஹெக்டர் நிலப்பரப்பை மக்கள் சக்தி வாங்கியது. தற்போது அந்த நிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிக்க அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

பேராக் சுங்கை சிப்புட் டோவன்பி தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு அருகில் உள்ள அந்த 10 ஹெக்டர் நிலப்பரப்பு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமானதாகும். அந்த நிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிப்பதற்கு முன்னதாக, முதல் கட்டமாக ஆசிரியர் பயிற்சி மையம் அமைக்கப்பட திட்டம்மிடப்பட்டிருந்தது.

பயிற்சி ஆசிரியர்கள் தங்குவதற்கு வசதியாக சிறப்பு தங்குமிடமும், மாணவர்கள் தங்கிப் பயில்வதற்கான விடுதியும் நிர்மாணிக்கப்படுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.

சிற்றுண்டியுடன் கூடிய தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிப்புக்கான பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுவதும் திட்டமிடப்பட்டிருந்தது என தனேந்திரன் விளக்கினார்.

முயற்சிகள் என்ன?

ஆனால், அவை யாவும் வெறும் திட்டமிடல் நிலையிலேயே இருப்பது குறித்து அவர் மிகுந்த வருத்தம் தெரிவித்தார். அதிகாரத்தில் இருக்கும் தலைவர்கள் இவ்விவகாரத்தில் கண்டும் காணாதது போல் இருப்பதையும் அவர் கண்டித்தார். தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிப்புக்கான பணிகளை துரிதப்படுத்தக் கோரி முக்கியப் பதவிகளை

வகிக்கும் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.

எதுவாயினும், பிரதமர் மற்றும் அரசாங்கத் தரப்பிடமிருந்து மிகவும் நல்ல பதில் கிடைக்கும் என மக்கள் சக்தி நம்புவதாக அவர் சொன்னார். இந்நிலையில், நாட்டில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்பட வேண்டுமா என சில தரப்புக்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. தமிழ் இடைநிலைப்பள்ளி ஏன் அமைக்கப்படக் கூடாது என்பது அவர்களுக்கான என் கேள்வி என தனேந்திரன் கூறினார்.

மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்ல தமிழ் இடைநிலைப்பள்ளி அவசியமானது என்பது அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டும். கல்வி அறிவாற்றல் மிக்க சமூகமாக விளங்கினால் மலேசிய இந்தியர்களின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என அனைத்து அம்சங்களும் மேம்படும் என்பது உறுதி. நமது மொழி, நமது அடையாளம், நமது உரிமைகளை நாம் தான் கேட்டுப் பெற வேண்டும். உரிமைகள் கிட்டும் வரையில் முயற்சிகள் தொடரட்டும் என தனேந்திரன் நம்பிக்கையுடன் கூறினார்.

தி மலேசியன் டைம்ஸ்

“கேன்ஜி” கேட்பது பிச்சை,  தட்டிக் கேட்பது உரிமை!

அன்புடன்,

ஆர்.எஸ்.தனேந்திரன்,
தலைவர்,
மலேசிய மக்கள் சக்தி கட்சி