இன்று கெந்திங் மலையில் தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியத்தை மேம்படுத்துவதற்கான மாநாடு துவங்கிறது

 

MALAYSIA-VOTE-INDIANSஇன்று பின்னேரத்தில், கெந்திங் மலையில் தமிழ்ப்பள்ளிகளில் இயங்கும், இயங்க வேண்டிய தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியங்கள் பற்றி விவாதிக்க ஒரு மாநாடு கூடுகிறது. இம்மாநாடு தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியங்களின் ஆண்டு மாநாடு அல்ல. இது தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியம் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவற்றை மேம்படுத்து பற்றி விவாதிக்க ஏற்பாடு செய்திருக்கும் மாநாடு. இம்மாநாட்டில் சுமார் 500 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ்ப்பள்ளிகளை நிர்வாகிக்கும் அதிகாரம் பெற்ற மேலாளர்கள் வாரியம் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும் இருக்க வேண்டும். இது சட்டம். இச்சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு கல்வி அமைச்சை சார்ந்ததாகும்.

இந்நாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. இப்போது 524 ஆக உயர்ந்துள்ளன. அப்படி என்றால், 524 தமிழ்ப்பள்ளி வாரியங்கள் இருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லை. சட்டம் என்ன ஆயிற்று? கல்வி அமைச்சர்தான் (முழு அமைச்சர்) இதற்கு பதில் கூற வேண்டும்.

2009 ஆண்டில், தமிழ் அறவாரியம் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும் மேலாளர்கள் வாரியம் இருப்பதை உறுதி செய்ய தீர்மானித்தது. அதற்கு முன்பு அந்த அமைப்பின் கணிப்புப்படி 10 விழுக்காட்டிற்கும் குறைவான தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமே மேலாளர்கள் வாரியங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை எப்படி செயல்பட்டன? ஆண்டவனைத்தான் கேட்க வேண்டும்.

தமிழ் அறவாரியம் எடுத்த முடிவிற்குப் பின்னர், அதன் விடாமுயற்சியால் இன்று 414 தமிழ்ப்பள்ளிகளில் மேலாளர்கள் வாரியங்கள் இருக்கின்றன. அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இனிமேல்தான் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், இன்னும் 110 தமிழ்ப்பள்ளிகளில் மேலாளர்கள் வாரியங்கள் அமைக்கப்படவில்லை. ஏன் என்பதற்கான பதிலை செய்தியாளர்கள் இம்மாநாட்டை நிறைவுசெய்து வைப்பதற்காக வரும் கல்வி அமைச்சரைக் கேட்க வேண்டும்.

தமிழ் அறவாரியம், பிரதமர்துறையின் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத் திட்ட வரைவு மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மன்றம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியம் மாநாடு 2016 ஐ ஏற்பாடு செய்துள்ளன.

இம்மாநாட்டில் பல முக்கியமான கருத்துகள் விவாதிக்கப்படவிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்க நிதி ஒதுக்கீடு சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் இந்நாட்டு குடிமக்கள். ஆகவே, அவர்களுக்கும் அரசமைப்புச் சட்டப்படி மற்ற பள்ளிகளுக்குச் சமமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை இம்மாநாடு வலியுறுத்த வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.