நீதிமன்ற உத்தரவை மீறுவது நோக்கமில்லை.. ஆனாலும் தண்ணீர் விட முடியாது: சட்டசபையில் கர்நாடக முதல்வர்

siddaramaiahபெங்களூர்: நீதிமன்றங்கள் மீது கர்நாடகாவுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கனவிலும் கூட நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்பது கர்நாடக அரசு எண்ணம் இல்லை. நானும் வக்கீலாக பணியாற்றியுள்ளேன். எனவே உச்சநீதிமன்றத்திற்கு போட்டியாக இந்த சட்டமன்றம் கூட்டப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என கர்நாடக முதல்வர் சித்தராமையா சட்டசபையில் தெரிவித்தார். காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது கர்நாடக அரசு.

இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், தீர்மானத்தை தாக்கல் செய்து, உறுப்பினர்கள் அதன் மீது விவாதித்து, ஒருமனதாக ஒப்புதல் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த தீர்மானத்தின்மீது பாஜக சார்பில் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, ம.ஜ.த சார்பில் எச்.டி.குமாரசாமி, நரேந்திரசாமி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் பேசினர். இறுதியாக மாலையில், முதல்வர் சித்தராமையா பேசினார். சித்தராமையா கூறியது:

அடுத்த மழை காலம் வரை காவிரி பாசன பகுதி மக்களுக்கு 24.11 டிஎம்சி குடிநீர் தேவை. விலங்குகள், கால்நடைகளுக்கு குடிக்க தேவைப்படும் தண்ணீர் இதில் சேர்க்கப்படவில்லை. இதுபோன்ற மோசமான சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. தமிழகத்தின் மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி 52 டிஎம்சி தண்ணீர் உள்ளது.

நீதிமன்றங்கள் மீது கர்நாடகாவுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கனவிலும் கூட நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்பது கர்நாடக அரசு எண்ணம் இல்லை. நானும் வக்கீலாக பணியாற்றியுள்ளேன். எனவே உச்சநீதிமன்றத்திற்கு போட்டியாக இந்த சட்டமன்றம் கூட்டப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

கடந்த 50 வருடங்களில் ஒருபோதும் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பொய்க்கவில்லை. ஆனால் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பொய்த்துப்போகிறது. மழை பொய்க்காததால் தமிழகத்தில் 3 மீட்டர் தோண்டினாலே தண்ணீர் கிடைக்கிறது. கர்நாடகாவில் ஆயிரம் அடிக்கு கீழேதான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. தமிழகத்தில் ஒருபோதும் மழையின்றி விவசாயம் பொய்க்கவில்லை. குறுவை சாகுபடி சிறப்பாக நடக்கிறது. இப்போது தண்ணீர் கேட்பது 2வது சாகுபடியான, சம்பாவுக்குதான்.

நிலைமை இப்படி இருந்தும் காவிரி தண்ணீரை மட்டுமே வற்புறுத்துவது தமிழக வாடிக்கை. எனவே, நமது மாநில விவசாயிகளை காப்பாற்றும் வகையில், சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு அரசு கட்டுப்படும். மக்களை காக்க வேண்டியது ஒரு அரசின் கடமை. அதிலிருந்து நான் தவற முடியாது. இவ்வாறு சித்தராமையா பேசிய பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. கர்நாடக குடிநீர் தேவைக்காக மட்டுமே காவிரி நீரை பயன்படுத்த வேண்டும் என்பது தீர்மானத்தின் சாராம்சம்.

tamil.oneindia.com

TAGS: