கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணனுக்குக் கைது ஆணை: இந்தியா பிறப்பித்தது

anandaபுது டில்லி   நீதிமன்றம்   ஒன்று   மலேசியக்   கோடீஸ்வரர்   டி.ஆனந்தகிரூஷ்ணனையும்   அவரின்   உதவியாளர்  ரால்ப்   மார்ஷலையும்  பிடிப்பதற்குக்   கைதாணை   வெளியிட்டிருக்கிறது.  இவ்விவகாரத்தில்   இண்டர்போலின்    உதவியும்   நாடப்பட்டுள்ளது.

கடந்த    ஈராண்டுகளாக   அவர்களை   நீதிமன்றத்துக்கு    அழைத்து   வர  மேற்கொள்ளப்பட்ட   முயற்சிகளுக்கு   மலேசிய     அதிகாரிகள்  ஒத்துழைக்காததால்   கைது  ஆணை  பிறப்பிக்க   வேண்டிய    அவசியம்   நேர்ந்தது    என   டைம்ஸ்   அப்  இந்தியா    தெரிவித்தது.

“இரு  நாடுகளுக்குமிடையிலான   பரஸ்பர  சட்ட  உதவி  உடன்படிக்கை   வழியாக   அவர்களுக்கு( மார்ஷல்,  ஆனந்தகிருஷ்ணன்)             நீதிமன்ற   அழைப்பாணை    சார்வு   செய்ய  இயலவில்லை.

“மலேசிய    அதிகாரிகள்  ஒத்துழைக்க   மறுத்தார்கள். இந்நிலையில்   இண்டர்போல்   உதவியை   நாடுவது  ஒன்றே  வழி.   அதற்குக்  கைது  ஆணை  பிறப்பிப்பது   அவசியம்……..

“மேற்கொண்டும்   அழைப்பாணை   விடுத்துக்  கொண்டிருப்பதில்  பலனில்லை  என்ற   நிலையில்    குற்றம்  சுமத்தப்பட்டவர்களுக்கு    எதிராக  கைது    ஆணை  பிறப்பிக்குமாறு    கேட்டுக்கொள்ளும்   உரிமை    அரசுத்தரப்புக்கு   உண்டு”,  என   நீதிமன்றம்   கூறியதாக     அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனம் கையகப்படுத்தியதில்     ஊழல் நடந்துள்ளதன்   தொடர்பில்    அவ்விருவருக்கும்   எதிராகவும்    இந்தியாவின்  முன்னாள்   தொலைத்தொடர்பு    அமைச்சர்    தயாநிதி    மாறனுக்கு    எதிராகவும்   இந்திய   போலீசார்   2014-இல்   வழக்கு   தொடுத்தனர்.