எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பான தெற்கின் அதிருப்தி!

elukatamil-2யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியானது தென்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

அரசாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எழுக தமிழ் தொடர்பான தமது எச்சரிக்கைகளையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த எழுக தமிழ் பேரணியானது தென்பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது.

எழுக தமிழ் பேரணியைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த எழுச்சிப் பேரணி தொடர்பில் தெற்கு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். போர் வெற்றிக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழ் தலைமைகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பது தொடர்பிலும் என்னென்ன விடயங்களை நீக்க வேண்டும் என்பது குறித்தும் பேசி வருகின்றனர். அவர்களுக்கு அதிகாரப் பகிர்வே தேவையாக உள்ளது என்று தெரிவித்திருக்கின்றார்.

இதேபோல் எழுக தமிழ் பேரணி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வடக்கில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணியானது அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடையாகவே உள்ளது. எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் எமது முயற்சியில் நாம் ஒருபோதும் பின்னிற்கமாட்டோம். எமது அரசாங்கமானது வடக்கு, கிழக்குப் பிரச்சினையைத் தீர்த்து நாட்டில் நிரந்தரமான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

இவரைப் போல் எழுக தமிழ் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, வடக்கில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியைக் கண்டு அரசாங்கம் அச்சமடையப் போவதில்லை. வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனின் கோரிக்கைக்கிணங்க வடக்கிலிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு ஒருபோதும் அரசாங்கம் இணங்கப் போவதில்லை. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் இன, மத ஐக்கியத்திற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான நிலையில் இனவாதமான இத்தகைய செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலமைச்சர் மற்றும் ஒரு சில இனவாதக் குழுக்களால் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் வடக்கிலிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் வெளியாட்களை அந்தப் பிரதேசத்தில் குடியேற்ற வேண்டாமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களது கோரிக்கைக்கிணங்க இராணுவ முகாம்களை அகற்றவேண்டிய தேவை எமக்கில்லை என்று கூறியிருக்கின்றார்.

பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண எழுக தமிழ் பேரணி குறித்து கருத்துக் கூறுகையில், வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் தூண்டப்படுவதை முழுமையாக தோல்வியடையச் செய்யவேண்டும். வார்த்தைப் பிரயோகம் செய்து மக்கள் மத்தியில் அச்சத்தையும் சந்தேகங்களையும் உருவாக்குவதற்கு முயற்சிக்கக்கூடாது. புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இனத்தவர்களுக்கும் சமமான அதிகாரங்களை வழங்குவோம். வடமாகாண முதலமைச்சர் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை நடத்திய எழுக தமிழ் பேரணி மூலம் அரசாங்கம் அச்சப்படப் போவதில்லை. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் இன, மத ஐக்கியத்திற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில் இனவாதமான இத்தகைய செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீரவும் கருத்துக் கூறுகையில், வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. அவரின் இந்த நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை. இவர் யாருடையதோ சூழ்ச்சியின் பங்குதாரராகவே இருக்கிறார். இவரின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களுக்கு கிடைக்கவுள்ளதும் கிடைக்காது போகலாம் என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இவ்வாறு எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமது அதிருப்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அரசாங்கத்தின் அமைச்சர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

இவர்களை விட எழுக தமிழ் பேரணியை ஜே.வி.பி.யும் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில். வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் தமது அரசியல் சுயநலனுக்காக இனவாதத்தை தூண்டுகின்றனர். இவர்களுக்கு இனவாதம் இல்லாது அரசியல் செய்ய முடியாதுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுச்சிப் பேரணியும் இதை வலியுறுத்துவதாகவே உள்ளது. விக்கினேஸ்வரன் தலைமையிலானவர்களுக்கு தற்போது தேவையானது சமஷ்டித் தீர்வல்ல. அதற்கு மாறாக தெற்கில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுவதேயாகும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி குற்றம் சாட்டியிருக்கின்றார்.

தென்பகுதியைப் பொறுத்தவரையில் எழுக தமிழ் பேரணி தொடர்பில் விமர்சனங்களே முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய எழுச்சிப் பேரணி நடத்தப்பட்டதனை அரசாங்கத் தரப்பினால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது அமைச்சர்களின் கருத்துக்களிலிருந்து புலப்படுகின்றது.

உண்மையிலேயே எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடத்த வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

யுத்தத்தினால் தமிழ் மக்கள் தமது உயிர்களையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக்கப்பட்டனர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஏழு வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், இன்னமும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையிலேயே யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.

இதன் பின்னராவது தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் முன்னைய அரசாங்க காலத்தில் அவர்கள் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டிருந்தது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டங்களைக் கூட சுதந்திரமாக நடத்த முடியாத இக்கட்டான நிலை நிலவி வந்தது.

இவ்வாறு அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் கடந்த வருடம் ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு பேராதரவினை வழங்கியிருந்தனர்.

புதிய ஆட்சியில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமென்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

புதிய ஜனாதிபதி பதவியேற்றதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீளவும் நல்லாட்சி உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வாறான நிலையில் தமது அன்றாடப் பிரச்சினைகளுக்காவது தீர்வு கிடைக்கும் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.

ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்ற ஆதங்கமும் அதிருப்தியும் தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

இத்தகைய ஆதங்கமும் அதிருப்தியுமே எழுக தமிழாக எழுச்சி பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் இந்த உணர்வெழுச்சியை அரசாங்கமானது புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ் மக்கள் கிளர்ந்தெழும் நிலையில் உள்ள போதிலும் நல்லிணக்க முயற்சியில் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது.

தென்பகுதியில் இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அச்சப்பட்டு வரும் நிலையில் வடக்கு, கிழக்கிலும் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் அந்த அதிருப்தியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக மாறி வருகின்றது என்பதையும் அரசாங்கமானது உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான இக்கட்டுக்களுக்கு மத்தியிலும் இவ்வருட இறுதிக்குள் அரசியல் தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்பதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது.

எனவே இந்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் பயன்படுத்தி உண்மையானதும் உறுதியானதுமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

-http://www.tamilwin.com

TAGS: