குவான் எங்: ஜிஎஸ்டி-யால் சில தொழில்கள் ஆதாயம் பெற முடியாமல் போனது

gstபினாங்கு   முதலமைச்சர்    லிம்    குவான்    எங்,   பொருள்,  சேவை   வரி  (ஜிஎஸ்டி)  அகற்றப்பட    வேண்டும்   என்று  கோரிக்கை   விடுத்திருக்கிறார்.  அவ்வரியால்  சில   தொழில்கள்  ஆதாயம்   காண  முடியாமல்  போனது  என்றாரவர்.

“பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    2017  பட்ஜெட்டை   நாடாளுமன்றத்தில்   தாக்கல்    செய்யும்போது   தம்    பொருளாதாரக்   கொள்கை   தோற்றுப்போனதை   ஒப்புக்கொண்டு    ஜிஎஸ்டி-யை   அகற்ற   வேண்டும்.  அப்போதுதான்    பொருளாதார  வளர்ச்சி   புத்துயிர்  பெறும்       சம்பாதிப்பவர்  கைகளில்  பணம்காசு   புரளும்.

“பொருளாதார  நிலவரம்   மோசமான  நிலையிலிருந்து   மிக   மோசமான  நிலைக்குச்  சென்றுவிட்டது.  சில   தொழில்கள்    இவ்வாண்டின்   முதல்  ஒன்பது   மாதங்களில்   எந்த  ஆதாயமும்   காணவில்லை   எனக்     குறைப்பட்டுக்  கொண்டிருக்கின்றன.  மாதச்  சம்பளம்    பெறுவோரிடம்    செலவுகளைச்   சரிக்கட்ட   போதுமான   பணம்   இல்லை”,  என  லிம்  இன்று  ஓர்   அறிக்கையில்    கூறினார்.

நிலைமை   இப்படியிருக்க    அரசாங்கம்   மட்டும்   “நெருப்புக்  கோழி   போல்  தலையை   மணலுக்குள்     புதைத்துக்  கொண்டு”    இரண்டாவது   காலாண்டில்    பொருளாதாரம்   நான்கு  விழுக்காடு  வளர்ச்சி  விகிதத்தில்    வெற்றிகரமாக    செயல்படுகிறது   என்று  கூறிக்   கொண்டிருக்கிறது    என்றாரவர்.

இந்த   வளர்ச்சியால்     தொழில்களோ     சராசரி  மலேசியரோ   நன்மை  அடையவில்லை   என்பதை    ஆகக்  கடைசி   ஜிஎஸ்டி       புள்ளிவிவரம்   காண்பிக்கிறது   என  லிம்  கூறினார்.  இரண்டாம்   காலாண்டில்   ஜிஎஸ்டி    வசூலில்  30  விழுக்காடு  குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி  வசூல்   குறைந்தது    விற்பனை  அளவும்    பயனீட்டாளர்கள்  செலவழிப்பதும்   குறைந்திருப்பதைக்  காட்டுகிறது    என்றாரவர்.