திடீர் தேர்தல் இல்லை என்கிறார் பிரதமர், ஆனால்………..

najibபிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்,    தம்   அரசாங்கத்துக்கு   அளிக்கப்பட்ட  ஆளும்  அதிகாரம்   2018-இல்  முடிவுக்கு   வரும்வரையில்   திடீர்   தேர்தல்   நடப்பப்போவதில்லை    என்று    கூறியதாக     அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்லினில்     செய்தியாளர்    கூட்டத்தில்     பேசியபோது    “எந்தவொரு   தனிக்  காரணத்துக்காகவும்”  தேர்தலை  முன்கூட்டியே   நடத்துவதற்கில்லை  என்று   நஜிப்      குறிப்பிட்டதாக  ராய்ட்டர்ஸ்   செய்தி    கூறுகிறது.

ஆனால்,    ஒரு  திடீர்   தேர்தல்   அடுத்த  ஆண்டில்   முதல்  காலாண்டிலேயே    நடக்கலாம்   என்பதுதான்   இப்போது   எங்கு   பார்த்தாலும்   பேச்சாக   உள்ளது.

தேர்தலைத்    தாமதப்படுத்துவது    நஜிப்புக்குத்தான்   பாதகமாக   அமையும்    என்றும்   சில   ஆய்வாளர்கள்   எச்சரிக்கின்றனர்.   அது  பிளவுபட்டுக்   கிடக்கும்   எதிரணியினர்   ஒன்றிணையவும்    தங்களை    வலுப்படுத்தவும்    வாய்ப்பாக    அமைந்து   விடும்.

மேலும், அது   டாக்டர்   மகாதிர்  முகம்மட்டும்   அவரது    பார்டி   பிரிபூமி    பெர்சத்து   மலேசியாவும்   அரசியல்    அரங்கில்    வலுவாகக்    காலூன்ற   போதுமான   அவகாசம்   அளிக்கும்.

எனவே,  இன்னும்  உறுதிப்படாதிருக்கும்   ஒரு   அரசியல்    சூழலில்    எதிரணியில்   நிலவும்   குழப்ப  நிலையைச்     சாதகமாக்கிக்  கொண்டு  பிரதமர்   தேர்தலை   முன்கூட்டியே   நடத்த     வேண்டும்    என்கிறார்கள்  அவர்கள்.

நஜிப்புக்கு   முன்பிருந்தவர்களும்   தேர்தல்   பற்றி   வினவும்போது    மறுப்புத்   தெரிவிப்பதை   வழக்கமாகக்   கொண்டிருந்தார்கள்   என்பதையும்    கவனிக்க    வேண்டும்.

2008,  பிப்ரவரி  12-இல்,  அப்போதைய   பிரதமர்   அப்துல்லா   அஹமட்    படாவியிடம்     நாடாளுமன்றம்   அடுத்த   24 மணி  நேரத்தில்   கலைக்கப்படுமா   என்று   வினவியபோது    அது   வதந்தி   என்று   நிராகரித்தார்.

அதற்கடுத்த   நாள்   நடைபெறவிருந்த   அமைச்சரவைக்   கூட்டம்தான்  தேர்தலுக்கு  முந்திய   கடைசிக்   கூட்டமா   என்று   கேள்வியையும்   தள்ளுபடி   செய்தார்.

“ஏன்  கடைசிக்  கூட்டம்   என்று   நினைக்கிறீர்கள்.  அமைச்சரவைக்   கூட்டம்   நடக்கும்,  நடக்கும்,  தொடர்ந்து   நடந்து   கொண்டே  இருக்கும்.  நீங்கள்  அதிபுத்திசாலிகளாயிற்றே   வதந்திகளைப்  பரப்புங்கள்,   மனம்    மகிழுங்கள்”,  என்றார்.

மறுநாள்,  அப்துல்லாவே   நாடாளுமன்றம்   கலைக்கப்படுவதை   அறிவித்தார்.  அபோது  செய்தியாளர்கள்   அவரை  மடக்கியபோது,  “தேர்தல்    தேதி   குறித்து    என்னால்   எதுவும்  சொல்ல   முடியாது….  அதற்குப்     பேரரசர்    ஒப்புதல்   தேவை”,  என்றார்.

இப்போது  நினைத்துப்  பார்த்தால்,   அப்துல்லா   மேலும்  சிறிது   காலம்   பொறுத்து    தேர்தலை     நடத்தி  இருந்தால்    நன்றாக   இருக்கும்  எனத்   தோன்றுகிறது.  ஏனென்றால்  2008-க்குப்   பின்னர்தான்  அரசியல்  களத்தில்   எதிர்பாராத   எத்தனை   மாற்றங்கள்……

முதல்முறையாக  ஆளும்   கட்சி     நாடாளுமன்றத்தில்    மூன்றில்   இரண்டு   பங்கு   பெரும்பான்மையை   இழந்தது.  சில   மாநிலங்களும்   எதிரணியின்  கைக்குச்   சென்று  விட்டன.

திடீர்  தேர்தலுக்கு   எதிரணி   தயாராகிறது
——————————–

எதிரணியைப்   பொறுத்தவரை,     திடீர்  தேர்தல்  இல்லை  என்று   பிரதமர்   கூறுவதை    நம்பத்   தயாராக  இல்லை.

“நாடாளுமன்றத்தை  எப்போது   கலைக்கலாம்   என்று  முடிவு  செய்யக்கூடிய   அதிகாரத்தைப்   பெற்றுள்ள    எந்தப்  பிரதமரும்     தேர்தல்    தேதியை   வெளியில்  சொல்ல  மாட்டார்.  அச்சிறப்புரிமையால்  கிடைக்கும்   நன்மையை   இழக்க  விரும்ப  மாட்டார்”,  என்று   பார்டி   பிரிபூமி  பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)  இடைக்கால   உதவித்   தலைவர்   முக்ரிஸ்  மகாதிர்    மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

பாஸ்  உதவித்   தலைவர்   இட்ரிஸ்   அஹ்மட்டும்,  பார்டி   அமானா  நெகரா  (அமனா)   தொடர்பு  இயக்குனர்   காலிட்   சமட்டும்    தேர்தல்    எந்த   நேரத்திலும்    வரலாம்   என்றனர்.

“காலம்   தாழ்த்தினால்    அவர்   அதிகம்  இழக்க    நேரும்”,  என  இட்ரிஸ்   கூறினார்.   காலிட்டும்   அதே  கருத்தைத்தான்   கொண்டிருக்கிறார்.

டிஏபி -இன்   அந்தோனி  லோக்கும்   பிகேஆர்   தலைமைச்    செயலாளர்   ரபிசி  ரம்லியும்     தம்தம்    கட்சிகள்    திடீர்    தேர்தலுக்கு    ஆயத்தமாகி   வருவதாகத்   தெரிவித்தார்கள்.