‘ஜனநாயகத்துக்குக் குழி பறிப்பவர் நஜிப்’- மகாதிர் சாடல்

drmபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,  தம்   எதிராளிகள்   ஜனநாயக  முறைப்படி   தேர்ந்தெடுக்கப்பட்ட   அரசாங்கத்தைக்  கவிழ்க்கப்   பார்ப்பதாகக்  குற்றம்  சாட்டிக்   கொண்டிருக்கும்   வேளையில்   அவரின்  பரம  வைரியான  டாக்டர்   மகாதிர்   முகம்மட்      ஜனநாயகத்தின்   எதிரி  நஜிப்தான்   என்று   சாடியுள்ளார்.

“நஜிப்      அவரது   அரசாங்கம்   ஜனநாயக   முறையில்  அமைந்தது   என்றும்  அதை  அகற்ற   நினைப்பது   ஜனநாயகத்துக்கு   எதிரானது    என்றும்  கூறிக்கொள்கிறார்.  இது   அடிப்படையற்றது,  நகைப்புக்குரியது.

“தோற்றுப்போன,   திருப்திகரமாக   செயல்படாத  அல்லது    நாட்டுக்குத்    தீங்கிழைத்த    தலைவர்கள்    அகற்றப்படுவது   ஜனநாயகத்தில்    ஏற்றுக்கொள்ளப்பட்ட   ஒரு   நடைமுறைதான்”,  என   மகாதிர்     தம்  வலைப்பதிவில்   கூறினார்.

ஆஸ்திரேலியா,  அமெரிக்கா,  பிரிட்டன்,   பிசேசில்   முதலிய   நாடுகளில்   தலைவர்கள்   பதவிக்காலம்   முடியும்  முன்னரே  விலகிக்  கொண்டிருக்கிறார்கள்,    அகற்றப்பட்டிருக்கிறார்கள்   என  முன்னாள்  பிரதமர்  கூறினார்.

“நஜிப்பும்   இப்போது  ஜனநாயகத்தைப்  புறக்கணிக்கிறார்”,  என்று  மகாதிர்    குறிப்பிட்டார்.

அதற்கு  சில  எடுத்துக்காட்டுகளையும்  முன்வைத்தார்.  இப்போது  அதிகாரப்  பகிர்வு   என்பது  இல்லை.   நாடாளுமன்றம்,  நிர்வாகம்,  நீதித்துறை    மூன்றும்  நஜிப்பின்   கட்டுப்பாட்டில்தான்  உள்ளன.  எம்பிகள்  பிரதமரின்  விருப்பப்படி   நடந்துகொள்ள    வேண்டிய   கட்டாய  நிலைக்குத்   தள்ளப்பட்டிருக்கிறார்கள்

இதனால்   நாடாளுமன்றத்தில்   நஜிப்புக்கு   எதிராக   நம்பிக்கையில்லாத்   தீர்மானம்   கொண்டுவர    முடிவதில்லை.

அரசாங்க   அதிகாரிகள்,   போலீஸ்,  இராணுவம்,   வணிகர்கள், ஊடகவியலாளர்கள்   அனைவருமே   நஜிப்  சொல்படி   நடக்க   வேண்டியவர்களாக  உள்ளனர்.  மறுத்தால்  விளைவுகளை  அனுபவிக்க   வேண்டிவரும்.

“இவையெல்லாம்  நஜிப்   நாட்டில்   ஜனநாயகத்தை  அழித்து  விட்டார்  என்பதைத்  தெளிவாகக்   காண்பிக்கின்றன”,  என்றார்.