திருட்டுச் சுகத்தில் மஇகா பயனடையும்! – கா. ஆறுமுகம்

NAJIB-MICஎன்றுமே இல்லாத அளவில் மலேசியாவின் பிரதமர் ஒருவர் சிறுபான்மையினரின் கட்சியாக இருக்கும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அடிபணியும் நிலையில் உரையாற்றியிருப்பது பெருமையாக உள்ளது. மஇகா பிளவுப்பட்டுக் கிடந்தாலும் அதற்கு அங்கிகாரமும் ஆதரவும் கொடுத்து அதோடு அள்ளி கொடுக்கப்போவதாக பிரதமர் அறிவித்துள்ளது காலத்தின் கோலமாகும்.

நேற்று மஇகாவின் 70 ஆவது ஆண்டு பொதுப்பேரவையில் உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் இரசாக், இந்தியர்கள் ஒன்றுபட்டால் அவர்கள் தேவைகளைக் கோரலாம் என்றார். இதற்கு முன்பெல்லாம் இந்த சிறுபான்மை இனத்தின் கட்சி கோரிக்கைகளை முழங்கியே தொண்டை கட்டி கடைசியில் மவுனமாக தலையை மட்டுமே ஆட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது.

கோரிக்கைகள் மட்டுமா, இனி யாரும் நம்மை கிளிங் என்றும் பென்டாத்தாங் என்றும் அழைக்கக்கூடாது என்கிறார் மாண்புமிகு பிரதமர். எதற்கும் ஓர் அளவு வேண்டும் என்று எண்ணிய போது, இந்தியர்களுக்கென்று ஒரு தேசிய செயல்திட்டத்தை அடுத்த சனவரியில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

மஇகா உடைந்த நிலையில் இருந்த போதும் நஜிப் அவர்கள் இந்த அளவுக்கு இறங்கி வந்திருப்பதில் ஒரு திருட்டுச் சுகம் இருப்பதை உணர முடிகிறது.

1எம்டிபி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முதலாம் மலேசிய அதிகாரி என்று அமெரிக்க நீதித்துறை அது பதிவு செய்தள்ள குற்றச்சாட்டில் கூறியிருப்பது பிரதமரைத்தான் என பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டலான் உட்பட பலர் கோடிகாட்டியுள்ளனர். அதோடு 230 கோடி ரிங்கிட் பிரமரின் வங்கி கணக்கில் பதிவாகியிருந்தது ஒரு நன்கொடை என்று கூறிய பிரதமர் அதை மீண்டும் திருப்பி அனுப்பி விட்டதாக சாமளித்திருந்தார்.

aru 1mdbஇந்த 1எம்டிபி ஊழல் நாட்டின் சொத்தில் சுமார் ரிம 4,000 கோடியை விழுங்கியிருக்கும் என முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த 1 எம்டிபி நிறுவனம் பிரதமர் நஜிப் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாகும்.

லஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் நாட்டின் பொருளாதராம் தாக்கதிற்கு உள்ளான போதும், அதில் தான் சம்பந்தப்படவில்லை என நஜிப் மறுத்து வருகிறார். இவற்றுக்கிடையே    அம்னோவிலிருந்து அவரை வெளியாக்கவும் பிரதமர் பதவியிலிருந்து அவரை அகற்றவும்     கோரும் மக்கள் பிரகடனம் ஒன்றை முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் மாமன்னரிடம் சமர்பித்துள்ளார்.

இப்படி இக்காட்டான சூழலில் சிக்கியுள்ள நஜிப் தனது அரசியல் பலத்தை உறுதி செய்ய தீவிரமாக இறங்கியுள்ளதை அவரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. பொதுத்தேர்தல் வழி தனது செல்வாக்கை நிலைநாட்டினால் மட்டுமே அவருக்கு அரசியல் சுவாசம் கிடைக்கும். அதற்காக அவர் விளையாடும் சதுரங்கத்தில் அவர் நகர்த்தும் ஒவ்வொரு காயும் முக்கியமாகும்.

இரண்டாக பிளவுபட்ட நிலையிலுள்ள  மஇகாவினர், தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டினாலும் அதில் தவறில்லை. அப்பாவிகள் போல அப்படியே தலையாட்டி அதன் வழி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக சோரம் போவதில் அப்படி என்ன தவறு இருக்கிறது என்றும் விவாதிக்கலாம். தலைக்கு மேலே வெள்ளம், சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று கிடைக்கும் வாய்ப்புகளை மஇகா முழுமையாக பயன்படுத்தி சமூகத்தைக் காப்பாற்ற முன்வரவேண்டும் என்றும் விவாதிக்கலாம்.

அந்தத் திருட்டுச் சுகம்தான் அம்னோவின் சுவாசமே என்பதை அனைத்து தேசிய முன்னணி கட்சிகளும் உணரும். இதில் மஇகா மட்டும் விதிவிலக்காக இருப்பது ஊழலுக்கு அவமானமாகும். அரசியல் என்பது சாக்கடைதானே, சுத்தமாகும்வரை  நீச்சல் அடியுங்கள்!