பாலர் கல்வி வழங்குவதில் ஓரவஞ்சனை! பூசிமெழுகுவதை நிறுத்திவிட்டு, போராடுங்கள்! – கா. ஆறுமுகம்

arumugam1அரசாங்கம் இந்தியக் குழந்தைகளின் பாலர் கல்விக்கு போதுமான வகையில் இன்னமும் முயற்சிகள் எடுக்கவில்லை. ஆனால், அரசாங்கம் அதிகமாகச் செய்து வருவதாக ஒரு மாயையை விளம்பரப்படுத்தி நமது பிரச்சனைகள் களையப்பட்டு வருவதாக செடிக் திட்ட அறிக்கைகளின் வடிவம் உள்ளது. இந்த நிரந்தரமற்ற செடிக் திட்ட வடிவங்கள் சமூக மாற்றங்களுக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடப்பாடுகளை சமூகத்தின் மீது திணிக்கும் ஒரு வியூகமாவே தோற்றமளிக்கிறது.

ஒரு வகையில் அரசியல் கட்சிகளின் கீழ் மாட்டாமல் செடிக் என்ற ஒரு தனிப் பிரிவின் வழி பலதரப்பட்ட சமூக நடவடிக்கைகளுக்கு அரசாங்க நிதி வழங்கப்பட்டது பாராட்டக்கூடியது என்பதை மறுக்க இயலாது. ஆனால், பாலர் கல்வி, தொழிற்கல்வி  போன்ற அடிப்படை உரிமை சார்ந்த துறைகளுக்கு நிரந்தரமான தீர்வு தேவை. அவை அரசாங்க கொள்கை அளவில் தீர்க்கப்பட வேண்டும்.

Preschoolமலேசிய அரசாங்கத்தின் கல்விப் பெருந்திட்ட அறிக்கையின்படி  (2013-2025) 2020-க்குள் பாலர் கல்வி என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் சூழல் உருவாக்கப்படவேண்டும் என்ற திட்டவரைவு உள்ளது. நமது நாட்டின் பாலர் கல்வி சுமார் 90 சதவிகித மக்களுக்கு கிடைத்து வருவதாக 11 வது மலேசியத் திட்ட அறிக்கை (2014) கோடி காட்டுகிறது. ஆனால், இந்தியக் குழந்தைகளைப் பொறுத்த மட்டில் 2013 வரையில் உள்ள அரசாங்க அறிக்கைகளின் வழி கிடைத்த தகவல்களை வைத்து ஒப்பீடு செய்கையில் சுமார் 64 சதவிகித குழந்தைகள் மட்டுமே பாலர் கல்வி பெற்று வருகின்றனர். பாலர் கல்வி என்பது 5 (4+) மற்றும் 6 (5+) வயது குழந்தைகளை உட்படுத்தும். சுமார் 56,000 இந்தியக் குழந்தைகளுக்கு இந்தத் தேவை உள்ளது.   இதில் அரசாங்கம் சுமார் 15,000 குழந்தைகளுக்கு பாலர் கல்வி வழங்குகிறது. தனியார் நிறுவனங்களும் தொண்டூழிய அமைப்புகளும் சுமார் 20,500 குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்கின்றன. பாலர் கல்வி எட்டாத நிலையில் பாதிப்புக்கு உள்ளாகும் சுமார் 20,500 குழந்தைகள் பி40 என்ற பின்னடைவில் உள்ள 40 சதவிகித வறுமை நிலையில் உள்ளவர்களின் குழந்தைகளாக இருப்பவர்களாகும்.

இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக அரசாங்கமும் – சமூக ஆர்வலர்களின் அமைப்புகளும் ஒருங்கிணைந்து கூட்டாகச் செயல்பட்டு பாலர் கல்வியை வழங்க முன்வர வேண்டும் என்பது அரசாங்கத்தின் ஒரு வழிமுறையாகும். இதில் ஒரு குறிப்பிட்ட நிதியை அரசாங்கம் வழங்கும். மற்றதை சமூக அமைப்புகள் திரட்ட வேண்டும் என்பதாகும். அந்த வழிமுறையின் கீழ் பல அமைப்புகள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழிமுறையானது பாலர் கல்வி பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வாக அமையாது. மேலும் இந்த வறுமை நிலையில் உள்ள இந்தியக் குழந்தைகளின் பாலர் கல்விக்கு நிதி வழங்க முன்வருபவர்கள் அதிகம் இல்லை. இது வரையில் மிகவும் தீவிரமாக நிதி வழங்கிய நிறுவனம் எம்சிஇஎப் என்ற மலேசிய சமூக கல்வி அறவாரியம்.

முனைவர் என். எஸ். இராஜேந்திரன் கீழ் இயங்கும் செடிக் இந்த பாலர் கல்விக்கு முதன்மை கொடுத்துள்ளது பராட்டத்தக்கதாகும். இதற்காக அரசாங்கம் செடிக் அமைப்புக்கு ஒதுக்கீடு செய்த 100 மில்லியனில் சுமார் 10 மில்லியன் ரிங்கிட்டை 7,000 குழந்தைகள் பயனடையும் வகையில் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் வழி பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 20,500 குழந்தைகளில் ஒரு பகுதியினர் தற்காலிக நிவாரணம் பெற்றுள்ளனர்.

நிரந்தர தீர்வு வேண்டும்

preschool 3aபாலர் கல்வியை தற்காலிக அளவில் நடத்துவது அரசாங்கத்தின் தீர்வாக இருக்கக்கூடாது. இது ஒரு முழுமையான அரசாங்கத்தின் கடப்பாடாகவும் செயலாக்கமாகவும் இருக்க வேண்டும். முறையாக பாலர் கல்வியை வழங்க ஒரு குழந்தைக்கு அரசாங்கம் வருடத்திற்கு  இயக்க செலவுக்காக சுமார் ரிம4,000 செலவு செய்கிறது. அதன் வழி கணக்கிட்டால் வருடத்திற்கு ரிம 82 மில்லியன் தேவைப்படும். இதில் மூலதனச்  செலவுகள் அடங்காது; அதற்குத் தனியான ஒதுக்கீடு தேவைப்படும்.

செடிக் வழி ஒதுக்கப்படும் நிதி போதாது; மேலும் அது நிரந்தரமற்றது. இது சார்பாக போதுமான தகவல்களை மலேசிய சமூக கல்வி அறவாரியம் தனது பல ஆண்டுகால ஈடுபாட்டில் கிடைக்கப்பட்ட தகவல்களை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொண்டு இந்த பிரச்சனையைக் களைய செயலாற்றி வருகிறது. எனவே போதுமான ஆய்வுகள் உள்ளன. ஆனால், அரசாங்கதின் தீர்க்கமான செயலாக்கம்தான் இல்லை.

முரண்பாடான ஒதுக்கீடு

Permata Rosmahஅதே வேளையில் பிரதமர் நஜிப் அவர்களின் துணைவியார், ரோஸ்மா மன்சோர் அவர்கள் நடத்தும் பெர்மாத்தா எனப்படும் பாலர் கல்வி திட்டத்திற்கு கடந்த 8 வருடங்களுக்கான (2009-2016) இயக்க செலவுக்கு அரசாங்கம்  ரிம328 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் வழி தற்போது அவர்கள் நடத்தும் 88 குழந்தைகள் மையத்தில் சுமார் 2,300 குழந்தைகள் உள்ளதாக அதன் இணையத்தளம் கூறுகிறது. அதன்படி கணக்கெடுத்தால் ஒரு குழந்தைக்கான அரசாங்க ஒதுக்கீடு ரிம 22,000 ஆகும். இது அரசாங்கம் மற்ற அரசாங்க பாலர் பள்ளிகளுக்கு அளிக்கும்     ஒதுக்கீடுகளை விட 5.5 மடங்கு அதிகமாகும். செடிக் ஒதுக்கீட்டோடு ஒப்பிடுகையில் 17 மடங்கு அதிகமாகும்.

Permata Expenditureஅடிப்படையில், குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஒதுக்கீட்டை பெர்மாத்தா என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக  செலவிடுவதும், அதே வேளையில் வறுமையில் உள்ள சுமார் 20,500 இந்தியக் குழந்தைகள் நிரந்தர பாலர் கல்வியற்ற நிலையில் இருப்பதும் ஒரு மோசமான கொள்கை முரண்பாடாகும்.

பிரதமர் இந்தியர்களுக்கான ஒரு விசேச திட்ட வரைவை சனவரியில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். அதில் இந்த பாலர் கல்விக்கான தீர்வை கொள்கை அளவில் அமலாக்கம் காண வலியுறுத்த வேண்டும்; அதற்காகப் போராட வேண்டும்.