டிபிபிஎ-க்கு ஆதரவா?, பிஎஸ்எம் எம்டியுசியைச் சாடியது

 

PSMweakMTUCடிபிபிஎ என்ற டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் மலேசியத் தொழிற்சங்க காங்கிரசை (எம்டியுசி) தொழிலாளர்களின் அவலநிலையை கைவிட்டுவிட்ட ஒரு பலவீனமான அமைப்பு என்று மலேசிய சோசியலிசக் கட்சி (பிஎஸ்எம்) குற்றம் சாட்டிள்ளது.

தொழிலாளர்களுக்கான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது டிபிபிஎயின் கட்டாயக் கடப்படாக இருப்பதால் எம்டியுசி அதனை வரவேற்பதாக அதன் தலைமைச் செயலாளர் என். கோபாலகிருஷ்ணன் இதற்கு முன்னர் மலேசியாகினிக்கு அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.

தொழிற்துறை சீர்திருத்தங்கள் டிபிபிஎ வழி வரும் என்று அதனை வரவேற்பது எம்டியுசி எவ்வளவு பலவீனமான அமைப்பாக இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. பெயரளவில் தொழிற்சங்கவாதிகளான இவர்கள் தொழிலாளர்களுக்காக போராட விரும்பவில்லை, மாறாக குறுக்குவழியை பின்பற்ற விரும்புகிறார்கள் என்று பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எ. சிவராஜன் கூறினார்.

PSMweakMTUC1டிபிபிஎயின் தொழிலாளர்களின் நலனுக்கு எதிர்மறையான நடவடிக்கைகள் குறித்து கோபால் மற்றும் எம்டியுசியுடன் பல சந்திப்புகளும் கருத்தரங்களும் நடத்திய பின்னரும், தொழிற்சங்க தலைவர்கள் வர்த்தக ஒப்பந்தங்கள் வழி தொழிலாளர் இனத்தின் வாழ்வைப் பறிக்கும் பெரும் நிறுவனங்களின் திட்டங்கள் குறித்து எதுவும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று சிவராஜன் வருத்தப்பட்டார்.

“கோபாலின் கருத்து தொழிற்சங்க பிரச்சனைகளை மட்டுமே கையாளும் தொழிற்சங்கவாதிகளின் போக்கை பிரதிபலிக்கிறது. தொழிலாளர்களுக்கான சீர்திருத்தங்கள் அனைத்தையும் டிபிபிஎயின் உதவியில்லாமல் மலேசிய அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியும் என்பதை அவர் உணரவில்லையா?

“இது ஓர் அரசியல் திண்மை சார்ந்த விவகாரமாகும். அச்சீர்திருத்தங்களுக்காக எம்டியுசி விடாமுயற்சியுடன் தொடர்ந்து பேராடியிருக்க வேண்டும்”, என்று சிவராஜன் கூறினார்.

டிபிபிஎ தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல் என்ற பிஎஸ்எம்மின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.