கிழக்குக் கரை இரயில் தடம் தங்கத்திலா கட்டப்படுகிறது? மாபுஸ் கேள்வி

mafuzகிழக்குக்  கரை  இரயில்   தட  (இசிஆர்எல்)    திட்டத்துக்கு  ரிம55 பில்லியன்    செலவிடப்படுவதை   ஆராய   ஒரு   சிறப்புக்  குழு   அமைக்கப்பட    வேண்டும்    என  பாஸின்  பொக்கோ   சேனா   எம்பி   மாபுஸ்  ஒமார்   கூறினார்.

அது  மக்களுக்கு   நன்மையளிக்கும்   ஒரு   திட்டம்  என்றாலும்   அதன்   தொடர்பில்   பல   கேள்விகள்     எழுவதாக    அவர்   கூறினார்  என    சினார்  ஹரியான்   அறிவித்துள்ளது.

“அதன்  கட்டுமானத்துக்கு   ரிம55  பில்லியன் -ஒரு  கிலோமீட்டருக்கு  ரிம91மில்லியன்-   செலவிடப்படுவதற்கு   அடிப்படை   காரணம்   என்ன?

“இதை  நாடாளுமன்றச்  சிறப்புக்  குழு  ஒன்று  மறுஆய்வு    செய்ய    வேண்டும்”,  என  மாபுஸ்   வலியுறுத்தினார்.

ஜுலை  மாதம்   சரவாக்   ரிப்போர்ட்,   நஜிப்  அரசாங்கம்   1எம்டிபி   கடன்களைத்   தீர்ப்பதற்கு  உதவியாக    இசிஆர்எல்   திட்டச்  செலவை   ரிம30   பில்லியனிலிருந்து    ரிம60 பில்லியனாக   உயர்த்துவதற்கு   சீனத்   தொடர்புத்துறை   கட்டுமான   நிறுவன(சிசிசிசி)த்துடன்  இரகசியமாக     ஏற்பாடு   செய்து   கொண்டிருப்பதாகக்  குற்றம்   சாட்டியது.

செலவுத்தொகை   ரிம60  பில்லியனாகக்  கூட்டப்படுவதாகக்  கூறப்பட்டதைப்   பொதுப்பணி   அமைச்சர்    படில்லா  யூசுப்  மறுத்தார்.

பட்ஜெட்டில்   குறிப்பிடப்பட்டிருக்கும்   தொகை   சரவாக்  ரிப்போர்ட்   கூறிய   தொகையைவிட     ரிம5 பில்லியன்தான்  குறைவு.  அப்படியிருக்க   அமைச்சர்  அதை   மறுப்பது    வியப்பளிக்கிறது   என்று  மாபுஸ்  கூறினார்.

“இதுதான்  உலகின்  மிக  விலை உயர்ந்த   இரயில்   பாதையா?  அரசாங்கம்  என்ன,   தங்கத்தில்   இரயில்   பாதை   அமைக்க   நினைக்கிறதா?”,  என்றவர்   வினவினார்.