பட்ஜெட் விவாதத்தின்போது டிஓஜே தொடர்பான கேள்விகளுக்கு ஒட்டுமொத்த தடை இல்லை

pandikar2017  பட்ஜெட்  மீதான   விவாதங்களின்போது   அமெரிக்க    நீதித்துறை(டிஓஜே)   வழக்கு    தொடர்பில்    எழுப்பப்படும்   கேள்விகள்    நீதிமன்றத்தை  அவமதிப்பதாகுமா   என்பது    கேட்கப்படும்   கேள்விகளை  வைத்தே  முடிவு   செய்யப்படும்.

பூச்சோங்    டிஏபி   எம்பி    கோபிந்த்  சிங்  டியோ,   டிஓஜே   வழக்கு  தொடர்பில்    33  வாய்மொழிக்   கேள்விகள்  எழுப்பப்பட்டபோது     அவற்றுக்குப்   பதிலளிப்பது   நீதிமன்றத்தை     அவமதிப்பதாகும்    என்று   கூறப்பட்டிருப்பதால்   அவ்விவகாரம்   தொடர்பில்   ஒரு  அதிகாரப்பூர்வ   முடிவு  தேவை   என்று   கேட்டுக்கொண்டிருந்தார்.

அவருக்குப்  பதிலளித்த   மக்களவைத்   தலைவர்  பண்டிகார்   அமின்  மூலியா   அது  தொடர்பில்   இன்னும்   கேள்வி  கேட்கப்படவில்லை   என்பதால்   ஒரு   முடிவுக்கு  வர  இயலாது   என்றார்.

“கேள்வியே  கேட்கப்படாதபோது    எப்படி   முடிவு   செய்வது.

“நீங்கள்   கேள்வி   கேட்கும்போது   அப்போது   மக்களவைத்   தலைவர்    நாற்காலியில்    அமர்ந்திருப்பவர்   எவரோ   அவர்,   அது   நிலை  ஆணைகளுக்கு   எதிரானதா   என்பதை   முடிவு    செய்வார்,    அதுதான்   முடிவு”,  என்றாரவர்.

இதற்குமுன்  நீதிமன்றத்தை   அவமதிப்பதாகும்   என்று  குறிப்பிட்டது   பற்றியும்  பண்டிகார்     விளக்கமளித்தார்.     அது     ஏற்கனவே   தாக்கல்   செய்யப்பட்ட   33   வாய்மொழி     கேள்விகள்   தொடர்பில்   செய்யப்பட்ட   முடிவு   என்றாரவர்.  அம்முடிவு    பற்றி  ஊடகங்களுக்கு   அறிவித்தபோது   அது   பட்ஜெட்   விவாதங்களுக்கும்   பொருந்தும்   என்று    கூறி  இருந்தால்   அது   தவறு    என்றார்.

“அப்படித்   தவறுதலாகக்  கூறியிருந்தால்   மன்னிப்பு   கேட்டுக்  கொள்கிறேன்”,  என்றாரவர்.
கடந்த   திங்கள்கிழமை  பண்டிகார்,  டிஓஜே   தொடர்பான   கேள்விகளுக்கு  அமைச்சர்கள்   பதிலளிக்க    வேண்டியதில்லை    என்றும்    அது  நீதிமன்றத்தை    அவமதிப்பதாக   அமையும்    என்றும்   கூறியிருந்தார்.

அதை   முன்னாள்   கூட்டரசு   நீதிபதி   கோபால்  ஸ்ரீராம்  உள்பட   பலரும்   குறைகூறினர்.

பண்டிகார்     நிலை  ஆணைளின்   அடிப்படையில்   அவ்வாறு  முடிவு   செய்ததாகக்   கூறினார்.

“வழக்குரைஞர்களும்   கோபால்   ஸ்ரீராம்   போன்ற   நீதிபதிகளும்   அதை   ஏற்க   மறுக்கலாம்.

“என்  கருத்துக்கூட   தவறாக  இருக்கலாம்.  ஆனால்,  அது  நிலை   ஆணைகளின்  அடிப்படையில்   செய்யப்பட்ட  முடிவு”,  என்றார்.  தம்  கருத்தை   ஏற்காதவர்கள்   அதை   மறு  ஆய்வு    செய்யுமாறு   தீர்மானம்   கொண்டு  வரலாம்    என்றும்   அவர்   குறிப்பிட்டார்.

டிஏபி  அதற்கான   தீர்மானமொன்றைத்   தாக்கல்   செய்துள்ளது.