கோவாவில் கன்னடர்கள் மீது கொடூர தாக்குதல்- அடித்து விரட்டப்பட்டதால் கர்நாடகாவில் கொந்தளிப்பு!!

kannadigasபனாஜி: கோவாவில் 40 ஆண்டுகாலமாக குடியிருந்து வந்த கன்னடர்கள் தாக்கப்பட்டு கர்நாடகாவுக்கு விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தால் இரு மாநிலங்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஃபோன்டா பகுதி. இது கோவாவின் மத்திய பகுதியில் உள்ளது.

இப்பகுதியில் 5 கன்னட குடும்பங்கள் 40 ஆண்டுகாலமாக வசித்து வருகின்றனர். கடந்த 15-ந் தேதியன்று கோவா மாநிலத்தவர் நடத்தும் கடையில் கன்னடர் ஒருவர் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதையடுத்து 200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் ஒன்று திரண்டு 5 கன்னட குடும்பத்தினரையும் கொடூரமாக தாக்கி அவர்களது வீடுகளை சூறையாடியுள்ளனர். கார்கள், பைக்குகளை எரித்து வெறியாட்டம் போட்டுள்ளனர். இதனால் உயிருக்கு அஞ்சி கன்னடர்கள் கர்நாடகாவின் பெலகாவிக்கு திரும்பிவிட்டனர்.

கோவாவில் கன்னடர்கள் அடித்துவிரட்டப்பட்ட சம்பவத்துக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. அத்துடன் பெலகாவிக்கு வரும் கோவா மாநிலத்தவரை பதிலுக்கு நாங்களும் அடித்துவிரட்டுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மகதாயி ஆற்று நீர் பகிர்வு பிரச்சனையால் கோவாவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே ஏற்கனவே பதற்றம் நிலவி வருகிறது. தற்போது கன்னடர்கள் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இரு மாநிலங்களுக்கும் இடையே சாலை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்தும் கன்னடர்களுக்கு கோவாவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அம்மாநில தலைமை செயலருடன் பேசுமாறு கர்நாடகா அரசின் தலைமை செயலருக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் காவிரி பிரச்சனையில் கர்நாடகா வாழ் தமிழர்களை கன்னடர்கள் அடித்து தாக்கினர். பெங்களூருவில் 200க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்களை எரித்து வெறியாட்டம் போட்டனர் கன்னடர்கள். இந்த நிலையில் கன்னடர்கள் மீது கோவாவில் கொலைவெறித் தாக்குதல் நடந்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: