தீப ஒளி ஏற்றி போராடுவோம், மலேசிய சோசியலிசக் கட்சியின் தீபாவளி நல்வாழ்த்துகள்

1psmதீபாவளி திருநாள் மகிழ்ச்சிகரமான ஒரு விழாவாக இருந்தாலும், நடுத்தர ஏழை மக்களுக்கு அது இன்னும் போராட்டக் களமாகவே இருந்து வருகிறது.

அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து வரும் இன்றையச் சூழ்நிலையில், தீபாவளிக்கென்று ஏற்படும் கூடுதல் பொருளாதாரச் சுமைகளைச் சமாளிக்க உழைக்கும் வர்க்கக் குடும்பங்கள் மிகுந்த சிரமத்தையே எதிர்நோக்குகின்றனர். ஆண்டுக்கொருமுறை வரும் இப்பண்டிகையைச் சிறப்பாகக்கொண்டாட வேண்டுமெனும் எண்ணத்தில் பலர் கூடுதல் நேர வேலையைக் கூட செய்கின்றனர்.

அறியாமை இருளிலிருந்து விடுவித்துக் கொள்ள, தீப ஒளி ஏற்றி போராடும் தத்துவத்தைத் தீபாவளி நமக்குப் பறைசாற்றுகிறது. ஆகையால், இத்திருநாளின் தத்துவத்தை நன்கு உணர்ந்து உழைக்கும் மக்களாகிய நாம் ஒன்றுபட்டு, அனைத்து மக்களின் ஒளிமயமான வாழ்க்கைக்கும் சமத்துவம் மேலோங்கவும் பாடுபடுவோம்.

நியாயமான ஊதியம், கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி, இலவசக் கல்வி, தரமான போக்குவரத்து வசதி மற்றும் சுகாதார வசதி போன்றவற்றை பெறுவதற்கு மலேசிய சோசியலிசக் கட்சி (பி.எஸ்.எம்) மக்களோடு இணைந்து, தொடர்ந்து போராடி வருகிறது. எல்லா வகையான பேதங்களையும் கலைந்து, அனைத்துத் தரப்பு மக்களும் இப்போராட்டங்கள் வெற்றி பெற ஆதரவு நல்க வேண்டும்.

PSM deepavali greetngsமக்களிடையே ஒற்றுமை மேலோங்கும்போது, ஆளும் வர்க்கத்தினர் ஒவ்வொரு முறையும் இனம், மதம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி மக்கள் சக்தியைத் திசை திருப்பிவிடுகிறார்கள். ஆனால், தீபாவளி போன்ற பெருநாள் காலங்களில் மட்டும் ஒற்றுமை பற்றி பேசி, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இது அவர்கள் நம்மை எள்ளிநகையாடுவது போல் உள்ளது. எனவே, உழைக்கும் வர்க்கத்தினர் இவற்றையெல்லாம் உடைத்தெரிந்து ஒன்றுபட வேண்டும். திருநாள் காலங்களில் மட்டுமே ஒற்றுமையை வலியுறுத்தாமல் பல்லின மக்களிடையே இந்தக் கோட்பாடு வலுப்பெற அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்.

இத்தீபாவளியன்று இனவாத உணர்வுக்கு ஆட்படாமல், சகோதரத்துவத்தை மேலோங்கச் செய்வோம்.

வர்க்க ஒற்றுமை மலரட்டும்.

வாழ்க பாட்டாளி! வளர்க வர்க்கப் போராட்டம்!!

சிவராஜன் ஆறுமுகம் (010 2580455)
தலைமைச் செயலாளர்
மலேசிய சோசியலிசக் கட்சி