தமிழரசுக் கட்சியின் தளராத நம்பிக்கை!

tna_colombo_12009ம் ஆண்டு முள்ளியவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழர் தரப்பின் ஜனநாயக அரசியல் அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே இருந்து வருகின்றது.

30 வருட அகிம்சை, 30 வருட ஆயுதப் போராட்டம் என போராடிய இந்த நாட்டின் ஒரு தேசிய இனமான தமிழ் மக்கள் போர் முடிந்த பின் கூட தமது அரசியல் உரிமைகளுக்காகவும், சமநீதி, சம உரிமைக்காகவும் போராட வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் நம்பிக்கையிழந்த நிலையில் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள். 30 வருட காலமாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடினார்கள்.

ஆனாலும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கையும், சில சர்வதேச நாடுகளும் பயங்கரவாத அமைப்பு என்றே கூறி வந்தது.

ஒரு நாட்டின் ஆளும் தரப்பால் அடக்கப்பட்ட தமிழீழம் தமது உரிமையைக் கோரி நிற்பது பயங்கரவாதாமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அந்த யுத்தம் இந்த நாட்டில் பாரிய அழிவுகளைத் தந்திருந்தது.

யுத்தம் முடிவடைந்து இன்று எட்டாவது ஆண்டும் நெருங்கப் போகின்றது.போரால் பாதிக்கப்பட்ட மக்களினது வாழ்வாதாரம், போரால் இடம்பெயர்ந்த மக்களினது மீள்குடியேற்றம், போரின் போது காணாமல் போகச் செய்யப்பட்டோர், போரின் போது கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாக இருப்போர், போர் நடைபெற்ற காலத்தில் நிலை கொண்ட இராணுவம் கையகப்படுத்திய நிலங்கள் என தமிழ் மக்கள் முன் இன்றும் ஏராளமான பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையே இருக்கிறது.

மஹிந்த ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டின் சிறுபான்மை இனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடும் அழுத்தங்கள், அடக்குமுறைகள் காரணமாக அந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுபான்மை சமூகம் இருந்தது.

போரின் வெற்றி வாதத்தில் மிதந்த மஹிந்த தொடர்ந்தும் தமது குடும்பமே ஆட்சியில் இருக்கும் என்ற மமதையில் செயற்பட்டார்.

இந்நிலையில் மஹிந்த விடுதலைப் புலிகளை வெல்வதற்கு உதவிய சர்வதேச சமூகத்தையும் இந்தியாவையும் புறந்தள்ளி இடது சாரி கொள்கைகளை வரிந்து கட்டிக் கொண்ட சீனா போன்ற நாடுகளுடன் தனது சிறிலங்கா சுதந்திர கட்சி கொள்கையுடன் கைகோர்த்தார்.

இது இந்து சமுத்திர கடலாதிக்க போட்டியில் மேற்குலகத்திற்கு அச்சுறுத்தலாக மாறியது. இலங்கையில் வீதி அபிவிருத்தி தொடக்கம் துறைமுகம் வரை சீனாவின் ஆதிக்கம் ஏற்பட்டது. இது மேற்குலத்திற்கும் இந்தியாவிற்கும் அச்சுறுத்தலாகவே அமைந்தது.

இந்நிலையிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை மூலம் இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் என்பவற்றை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. ஆனாலும் மஹிந்த அதனை கண்டு கொள்ளவிலலை.

இதன் விளைவே வெற்றிவாதத்தில் மிதந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அதில் இருந்து வெளியேறி ஜனாதிபதி வேட்பாளாராக மக்கள் முன்தோன்றினார்.

மேற்குலகத்தின் காய் நகர்த்தலால் நீலத்துடன், பச்சையும் இணைந்து இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான வலுவான தளம் போடப்பட்டது.

ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து இருந்த தமிழ் மக்கள் தற்போதைய ஜனாதிபதிக்கே வாக்களித்தனர்.

மறுபுறம் இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னனியில் மேற்குலகம், இந்தியா இருப்பதாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு முழுமையாக ஆதரவு வழங்கியதாலும் தமிழ் மக்கள் இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்ற காலம் முதல் அனுபவித்து வருகின்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு வரும் என நம்பியிருந்தனர்.

இதனால் பெரும்பான்மை இனத்தவரின் சிறுபான்மையான வாக்குகளைப் பெற்ற மைத்திரி சிறுபான்மை இனத்தின் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால் ஜனாதிபதியானார்.

தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி இந்த நாட்டில் நீடித்து இருக்கும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் எனவும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்த போதும் அது தொடர்பில் போதிய கரிசனை செலுத்தியதாக தெரியவில்லை.

ஜனாதிபதி மைத்திரியின் உடைய நூறு நாள் வேலைத்திட்டத்தில் கூட தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

பாராளுமன்ற தேர்தலின் பின் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை நம்பியிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் அவர்கள் இதன் காரணமாகவே 2015ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைகள் சூடு பிடித்திருந்த நிலையில் யாழில் ‘2016 ற்குள் தீர்வு காணப்படும். அந்த தீர்வைப் பெறுவதற்கு அனைவரும் ஒற்றுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்’ அதனை குழப்பாது தீர்வுக்காக வாக்களிக்குமாறு கோரியிருந்தார்.

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய் கூட்டமைப்புக்கு கடும் சவாலாக எதிர்வு கூறப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) இந்த தேர்தலில் படுதோல்வியடைந்தது.

சம்பந்தன் கூறிய 2016ற்குள் தீர்வு என்ற விடயமே இந்த தோல்விக்கும் காரணமாகியது. பாராளுமன்றத் தேர்தல் முடிந்து ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் கடந்து விட்டது. 2016ம் ஆண்டு நிறைவு பெறுவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சி உள்ளன. ஆனால் தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகள் கூட இன்னும் தீர்க்கப்படாத நிலையே உள்ளது.

நெருக்குவாரங்களும், அடக்குமுறைகளும் ஆட்சி மாற்றத்தின் பின் குறைந்திருக்கின்ற போதும் தமிழ் மக்கள் முன்னுள்ள மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் பிரச்சினை, காணால் போனார் பிரச்சினை, காணி சுவீகரிப்பு, பௌத்தமயமாக்கல் என எவற்றுக்கும் முழுமையான முடிவு எட்டப்படாத நிலையே உள்ளது.

முன்னைய ஆட்சியைப் போன்றே புத்தர் சிலைகளை நிறுவி பௌதமயமாக்கல், தமிழர் நிலங்களை அபகரித்து திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் என்பன நல்லாட்சி எனக் கூறப்படும் இந்த ஆட்சியில் புது வடிவம் பெற்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதனாலேயே தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அடிக்கடி ஆட்சியாளர்களின் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகளின் வருகை என்பன இடம்பெறுகின்ற போதும் தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான விடயங்கள் இதுவரை நடந்ததாக இல்லை.

இதனால் தமிழ் மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். எழுக தமிழாய் தமிழ் மக்கள் அணிதிரண்டு அரசுக்கும் சர்வதேசத்திற்கும் தமது கோரிக்கைகளை மீள ஒருமுறை வெளிப்படுத்தியிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக்கட்சியாகிய தமிழரசுக் கட்சி இதனை எதிர்த்து அரசாங்கத்துடன் பேசி வருகின்றோம். சர்வதேசமும் வாக்குறுதி தந்துள்ளது. இதனால் இந்த நிலையை குழப்பக் கூடாது என கூறி தமிழ் மக்கள் வீதியில் இறங்குவதற்கு தடையாக இருந்தது.

இருப்பினும் தமிழ் மக்கள் வீதியில் இறங்கினார்கள் என்பது வேறு கதை. இந்தப் பின்னனியிலேயே தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக தமிழரசுக் கட்சியின் பொதுமக்கள் சந்திப்புக்களில் அவ்வப்போது சலசலப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.

மு.திருநாவுக்கரசு அவர்களின் அரசியல் யாப்பு தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட சர்ச்சைகள் ஆறுவதற்கு முன்னரே, அண்மையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை தமிழரசுக் கட்சி ஒழுங்கு செய்திருந்தது.

அதிலும் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் போது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தடுமாறியதை அவதானிக்க முடிந்தது.

தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு இல்லை எனின் எம்மை ஆள முடியாதபடி செய்வோம் என சர்வதேசத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

அவ்வாறு வாக்குறுதி வழங்கிவிட்டு நாம் எவ்வாறு வீதியில் இறங்கி உடனடியாக போராடுவது. அது சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக அமையும்.

30 வருட அகிம்சை, 30 வருட ஆயுதப்போராட்டம் என போராடி எதை சாதித்துள்ளீர்கள். இவ்வளவு காலம் பொறுத்த நீங்கள் இரண்டு மாதம் பொறுக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வினையே பெறும். அதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம். ஒரு இரண்டு மாதம் பொறுமை காத்து எமக்கு கால அவகாசம் தாருங்கள். தீர்வு கிடைக்காவிட்டால் அதற்கு பிறகு என்ன செய்வதொன்று கூறுகின்றோம்’ என்றார்.

ஆக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக் கட்சி புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வினைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் பயணிக்கின்றது.

ஆனால் தென்னிலங்கையில் நடக்கின்ற சம்பவங்கள், அங்கிருந்து வரும் கருத்துக்களை பார்க்கின்ற போது அவ்வாறானதொரு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகின்றது.

கூட்டமைப்பு கோரும் கால அவகாசம் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே. அதனை வழங்குவதால் அல்லது இரண்டு மாதம் பொறுத்திருப்பதால் தமிழ் மக்கள் அழிந்து விடப்போவதில்லை.

ஆனால் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படுகின்ற போது தமிழ் மக்கள் முன்னிறுத்திய வடக்கு, கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு கிடைக்காத பட்சத்தில் என்ன செய்வது…?.

அப்போது தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசியப் கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது..? என்ற கேள்விகளே தற்போது எழுகிறது.

எனவே, வரவிருக்கும் புதிய அரசியலமைப்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வையும் இருப்பையும் தீர்மானிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கள யதார்த்தம்.

-http://www.tamilwin.com

TAGS: