முக்ரிஸ்: என் தந்தையின் செல்வாக்குடன் நஜிப் அவரது செல்வாக்கை ஒப்பிட வேண்டிய அவசியமில்லை

mukபிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்    அம்னோவில்     அவரது   செல்வாக்கை  அவருக்கு   முன்னவரான   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டின்    செல்வாக்குடன்   ஒப்பிடுவது    தேவையற்றது     என்கிறார்  பார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியா  துணைத்   தலைவர்  முக்ரிஸ்.

“மகாதிர்   கட்சியிலிருந்து   வெளியேறி   நீண்ட  காலம்   ஆயிற்று.  அதனால்  மகாதிரின்  செல்வாக்கு  குறித்து   கேள்வி   எழுப்ப   காரணம்  இல்லை”,  என்று  முக்ரிஸ்   கூறியதாக   சினார்  ஹரியான்   அறிவித்துள்ளது.மகாதிர்  அம்னோவிலிருந்து   வெளியேறி  ஒன்பது   மாதங்கள்   ஆகின்றன.

ஞாயிற்றுக்கிழமை   த  சண்டே   ஸ்டாருக்கு  வழங்கிய    நேர்காணலில்   தாம்  23ஆம்  வயதிலிருந்தே    கட்சித்   தலைவர்களுடன்    சேர்ந்து   வளர்ந்து   வந்திருப்பதாக   நஜிப்   கூறியிருந்தார்.

அது   தமக்கு    மிகவும்     சாதகமாக    அமைந்து  விட்டது   என்றும்    அதனால்தான்  மகாதிரால்     தம்மை  அம்னோவில்  அசைக்க  முடியாமல்  போயிற்று  என்றும்   கூறினார்.

மகாதிர்  குறித்து  அம்னோவில்  இப்போது  “அச்சம்”   இல்லை  என்றும்  நஜிப்  சொன்னார்.

“அவர்    அச்சுறுத்தலைப்  பயன்படுத்தி    ஆட்சி  செய்து   கொண்டிருந்தார். அவர்  கட்சித்   தலைவர்   இல்லை   என்ற  ஆனதும்   அவர்மீதிருந்த   அச்சம்    அகன்று  விட்டது.  அம்னோவைக்  கட்டுப்படுத்தும்   ஆற்றலும்  அவருக்கு  இல்லாமல்  போனது.  அவரால்  அம்னோவில்  எதையும்  தீர்மானிக்கவும்   முடியாமல்  போனது. அம்னோவுக்கு  அவர்மீது  மரியாதை   உண்டு.  ஆனால்,  அச்சம்  இல்லை”,என  நஜிப்  கூறினார்.

மகாதிருக்கு   அம்னோ   தொகுதித்   தலைவர்களுடன்  நெருக்கமும்  இல்லை   என்றாரவர்.

இவையெல்லாம்   நஜிப்பின்   தனிப்பட்ட   கருத்துகள்    என  மகாதிரின்  மகன்களில்  ஒருவரான   முக்ரிஸ்   கூறினார்.

“எனக்குத்   தெரிந்தவரை    நஜிப்புடன்   ஒத்துப்போகாத   அம்னோ  உறுபுப்பினர்களும்   இருக்கவே  செய்கிறார்கள்.  அவர்கள்  அதை  வெளியில்  சொல்வதில்லை,  அவ்வளவுதான்”,  என்றார்.