தெங்கு ரசாலி: ஓராங் அஸ்லிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுப்பது தவறு

asliகுவாங்  மூசா  எம்பி   தெங்கு   ரசாலி  ஹம்சா,  தம்   தொகுதிவாழ்  ஓராங்  அஸ்லிகளின்   கோரிக்கைகள்   தமக்குப்  புரிகிறது     என்றுரைத்து  அதே  நேரத்தில்  அவர்கள்   சட்டத்தைத்   தங்கள்  கைகளில்    எடுத்துக்கொள்ளவும்    கூடாது    என்றும்   வலியுறுத்தினார்.

இன்று   அம்னோ   பொதுப்பேரவைக்   கூட்டத்துக்கிடையே  செய்தியாளர்களிடம்    தெங்கு    ரசாலி   பேசினார்.   மரம்  வெட்டுவோரைத்   தடுக்க   தடுப்பு  அரண்கள்  அமைப்பதற்கு    ஓராங்  அஸ்லிகளிடம்   நியாயமான  காரணங்கள்  இருக்கலாம்.  ஆனாலும்   அது   சட்டவிரோதமான   செயல்தான் என்றார்.

“அது  சட்டத்தைக்  கையில்  எடுத்துக்கொள்வதாகும்.  அவர்களின்   போலீசின்   உதவியை   நாடியிருக்க   வேண்டும்”,  என்றவர்  சொன்னார்.

11வது   தவணையாக      குவாங்  மூசா  எம்பியாக   உள்ள     தெங்கு  ரசாலி  தம்  தொகுதிவாழ்   ஓராங்    அஸ்லி  சமூகம்   பிழைப்பு   நடத்தவே  சிரமப்படுவதை    உணர    முடிகிறது   என்றார்.

“நீர்  அழுக்காக  உள்ளது.  மரவெட்டிகள்   கண்மூடித்தனமாக    மரங்களை   வெட்டிச்  சாய்த்து   அவர்களின்  கிராமங்களையும்   அழித்து  விட்டதால்   அவர்களின்  பயிர்கள்  எல்லாம்   நாசமாகிவிட்டன”,   என  தெங்கு   ரசாலி   கூறினார்.

அதற்காக   மரவெட்டிகளைத்   தண்டிக்க   வேண்டாமா   என்று   வினவியதற்கு   அதை  கிளந்தான்  அரசுதான்   முடிவு   செய்ய   வேண்டும்   என்றார்.