ஐஜிபி: டத்தோ எஜமானரைச் சுட்டுக் கொன்றவருக்கு இராணுவப் பின்னணி உண்டு

igpநேற்றிரவு பினாங்கு    லிம் சொங் யூ விரைவுச்சாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்   கைது செய்யப்பட்ட  சந்தேக    நபருக்கு  இராணுவப்   பின்னணி   உண்டு   என   இன்ஸ்பெக்டர்-  ஜெனரல்   அப்  போலீஸ்     காலிட்   அபு   பக்கார்  கூறினார்.

அந்த   35வயதான   மெய்க்காப்பாளருடன்   “மன  நோயாளி”யான   இன்னொருவரும்  விசாரணைக்காக   தடுத்து  வைக்கப்பட்டிருப்பதாக  காலிட்    தெரிவித்தார்.

35வயதான   அந்த  இன்னொரு   ஆடவரும்    மெய்க்காப்பாளரால்       சுட்டுக்கொல்லப்பட்டதாகக்  கூறப்படும்    டத்தோவுடன்   அதே  காரில்  பயணம்   செய்தவர்தான்.

இருவரும்  ஏழு   நாள்களுக்குத்   தடுத்து   வைக்கப்படுவர்.

நேற்றிரவு    நடந்த   துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்    32-வயது   டத்தோ   உள்பட   மூவர்    சுட்டுக்கொல்லப்பட்ட    வேளையில்      ஆர்.டி.எம் ஒளிப்பதிவாளரான முகமது அமிருல் அமின்   உள்பட   நால்வர்   காயங்களுக்கு   ஆளானார்கள்.

கொலைக்கான     நோக்கம்   பற்றி  விவரிக்க   மறுத்த   காலிட்    அதை  நிதிமன்றமே   முடிவு  செய்யட்டும்    என்றார்.

“தொடக்க  விசாரணைகளில்   சந்தேக   நபருக்கு   மனநோய்   இருப்பது   தெரிகிறது.  ஆனால்,  அவர்மீது  இதற்குமுன்  குற்றப்  பதிவு   எதுவும்  இல்லை”,  என  ஐஜிபி    கூறினார்.

சம்பவம்  நடந்த  இடத்தில்  போலீசார்     ஒரு  துப்பாக்கியைக்    கண்டெடுத்தனர்.  அது  ஒரு   பாதுகாப்பு  நிறுவனத்துக்குச்  சொந்தமானது    என்றார்.