அம்னோ பேராளர்: சீனர்களும் இந்தியர்களும் கடந்த காலத்தில் இழைத்த தவறுகளை மன்னிக்கும் பெரிய மனசு மலாய்க்காரர்களுக்கு இருக்கிறது

 

umnoஅம்னோ மிகுந்த பொறுமையுடைய கட்சி. கடந்த காலத்தில் தாய்லாந்துக்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகளை மன்னிக்கும் பெரிய மனசு கொண்டவர்கள் மலாயக்காரர்கள் என்று இன்று அம்னோ பொதுக்கூட்டத்தில் கிளந்தான் அம்னோ பேராளர் முகமட் சையாபுடின் ஹசிம் கூறினார்.

கடந்த காலத்தில் தாய்லாந்துக்காரர்கள் கெடாவை தாக்கி ஏராளமான மலாய்க்காரர்களை சித்திரவதை செய்து கொன்றனர் என்று அவர் கூறினார்.

அவ்வாறே இந்திய மன்னர் ராஜேந்திர சோழர் கெடா துவாவை தாக்கினார். போர்த்துக்கீசியர்கள் மலாக்காவை கைப்பற்றிய போது சீனர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு மலாய்க்காரர்களுக்கு துரோகம் செய்தனர் என்று அவர் மேலும் கூறினார்.

“ஆனால், இப்போது கெடாவில், கிளந்தானிலும் கூட, பல தாய் கிராமங்கள் இருக்கின்றன.

“இந்தியர்கள் அமைதியான நிலையில் வாழ்கின்றனர், பழிவாங்கும் எண்ணம் மலாய்க்காரரிடம் இல்லை.

“இன்று சீன வம்சாவளியினர் மலேசியாவில் அமைதியான நிலையில் வாழ்கின்றனர்”, என்று முகமட் சையாபுடின் கூறினார்.

எனினும், இப்போது டிஎபி வடிவத்தில் ஒரு புதிய நம்பிக்கைத்துரோகமான மருட்டல் இருக்கிறது. அது இஸ்லாத்திற்கும் மலாய்க்காரர்களுக்கும் எதிரானது என்றாரவர்.

மலாய்க்காரர் அல்லாத பிஎன் பங்காளிக் கட்சிகளும் நம்பிக்கைத்திரோகிகளாக மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அக்கட்சிகள் அம்னோவுடன் சேர்ந்து உழைத்து பிஎன் அரசாங்கத்தை தற்காக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

இந்த அரசாங்கம் வீழ்ந்தால், ஏழு தலைமுறைக்குள்ளும் அது மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை என்று கூறிய சையாபுடின், டிஎபி அம்னோவின் முதல் எதிரியாக மீண்டும் இவ்வாண்டு பொதுக்கூட்டத்தில் தலைதூக்கியுள்ளது என்றாரவர்.