அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி கண்ட ஒரே புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ட்ரோ

 

Castroheroகியூபாவின் புரட்சித் தலைவரான அதிபர் பிடல் ரூஸ் கேஸ்ட்ரோ அவர் ஆட்சியிலிருந்த கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் உலக வல்லரசான அமெரிக்காவின் பதினோறு அதிபர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார். கேஸ்ட்ரோவை கொல்வதற்கு அமெரிக்க உளவு அமைப்புகளும் அவற்றின் ஆதரவு பெற்ற தனியார்களும் 200 க்கு மேற்பட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். எல்லாவற்றையும் ஒரு கைப்பார்த்து விட்டு, ஒரு மக்கள் நலம் சார்ந்த ஆட்சியயை நடத்தி, ஒரு புதிய கியூபாவை உருவாக்கி விட்டு தமது 90 ஆவது வயதில் கடந்த நவம்பர் 25, 2016 இல் பிடல் கேஸ்ட்ரோ காலமானார்.

ஒரு சிறிய இராணுவ ஜீப் கியூபாவின் தேசியக் கொடியால் மூடப்பட்ட பிடல் கேஸ்ட்ரோவின் Castrotrailerஅஸ்தியை  சுமந்து கொண்டு அவர் ஐம்பது ஆண்டுகளாக மக்களின் நாயகனாக இருந்து ஆட்சி செய்த ஹவானாவிலிருந்து அவர் கியூபாவின் சர்வாதிகாரி பேட்டிஸ்டாவுக்கு எதிரான புரட்சியைத் தொடங்கிய 800 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள சண்டியாகோவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. டிசம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை பிடல் கேஸ்ட்ரோவின் அஸ்திக் கலசம் முறையாகக் கல்லறையில் வைக்கப்படும்.