மலாய்க்காரர்கள் அன்வார் அல்லது ஹாடியை விட மகாதிர் அடுத்தப் பிரதமர் ஆவதை ஆதரிக்கின்றனர், ஆய்வில் தெரிய வந்துள்ளது

mstillonபிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகிய இருவரையும் விட மகாதிர் முகம்மட் மீண்டும் பிரதமர் ஆவதை மலாய்க்காரர்கள் விரும்புகின்றனர் என்பது இன்ஸ்டிடுட் டாருல் ஏசான் (ஐடிஇ) மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வின்படி, 29 விழுக்காட்டு மலாய்க்காரர்கள் மகாதிர் பிரதமர் ஆவதை விரும்புகின்றனர். இரண்டாவது நிலையில் அன்வாரும் ஹாடியும் தலா 25 விழுக்காடுகள் பெற்றுள்ளனர்.

மலாய்க்காரர்களுள் பார்ட்டி பெரிபூமி பெர்சத்து மலேசியாவின் தலைவர் முகைதின் யாசின் 13 விழுக்காடு பெற்று மூன்றாவது நிலையில் இருக்கிறார். டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியான் ஒரு விழுக்காடு பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறார்.

ஆகஸ்ட் 26 லிருந்து செப்டெம்பர் தொடக்கம் வரையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1,761 பேர் பங்கேற்றனர்.

சீனர் சமுதாயத்தைப் பொறுத்த வரையில், பிரதமர் பதவிக்கு லிம் கிட் சியாங் மிகப் பிரசித்திப் பெற்ற வேட்பாளர் – 42 விழுக்காட்டினரின் ஆதரவைப் பெற்றார். அவருக்கு அடுத்து அன்வார் – 32 விழுக்காடு; மகாதிர் 14 விழுக்காடு; முகைதின் 9 விழுக்காடு; ஹாடி 3 விழுக்காடு.

இந்திய சமுதாயத்தின் தேர்வு: அன்வார் 40 விழுக்காடு; மகாதிர் 33 விழுக்காடு; முகைதின் 19 விழுக்காடு; லிம் கிட் சியாங் 9 விழுக்காடு; மற்றும் ஹாடி 2 விழுக்காடு.

ஆனால், அனைத்து சமுதாயங்களையும் சேர்த்துப் பார்க்கையில் அன்வார் மூன்நிலையில் இருக்கிறார். 30 விழுக்காட்டினர் அவர் பிரதமராவதை விரும்புகின்றனர். அடுத்து, இரண்டாவது இடத்தில் 24 விழுக்காட்டுடன் மகாதிர்; முகைதின் 17 விழுக்காட்டுடன் 3 ஆவது இடத்தில்; 15 விழுக்காட்டுடன்  நான்காவது இடத்தில் லிம் கிட் சியாங், கடைசியாக ஹாடி, 14 விழுக்காடு.

இந்த ஆய்வின்படி மலேசியர்களிடையே அன்வார் இப்ராகிம், சிறையில் இருந்தாலும், இன்னும் பிரசித்தி பெற்றவராக இருக்கிறார் என்று ஐடிஇயின் அரசியல் கல்வி மற்றும் ஜனநாயகம் ஆகிய பிரிவுகளின் தலைவர் ஷஹாருடின் படாருடின் கூறினார்.