ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 திருத்தங்களுக்கு பின் பங்களிக்கட்சிகள் ஆட்சேபிக்க முடியாது

 

Noobjectionஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் பரிபாலனம்)  சட்டம் (சட்டம் 355) திருத்தங்கள் மசோதாவை பெடரல் அரசாங்கம் எடுத்துக் கொண்ட பின்னர் பாரிசான் நேசனல் பங்காளிக்கட்சிகள் அத்திருத்தங்களுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்க முடியாது.

ஆளும் கூட்டணியின் பங்காளிகள் என்ற முறையில் பாரிசான் நேசனல் பங்காளிக்கட்சிகள் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் கட்டாயத்துக்கு உட்பட்டுள்ளன என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அஹமட் மாஸ்லான் கூறினார்.

இதற்கு முன்னர் சட்டம் 355 க்கான திட்டமிடப்பட்ட திருத்தங்களை மசீச விரும்பவில்லை என்று நாம் கேட்டிருக்கிறோம்; மஇகா ஆட்சேபித்தது; கெராக்கான் கூட ஆட்சேபித்தது.

ஏன் ஆட்சேபிக்கிறீகள் என்ற கேட்டபோது, இந்த மசோதாவை பாஸ் கட்சியின் அப்துல் ஹாடி அவாங் கொண்டு வந்தார் என்று அவர்கள் அம்னோவிடம் தெரிவித்தனர் என்று பிடபுள்யுடிசியில் இன்று நடைபெற்ற ஓவர்சீஸ் கிளப் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் மஸ்லான் கூறினார்.

சட்டம் 355 க்கான திருத்தங்களை ஹாடி அவாங் நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வில் தாக்கல் செய்தார்.

இனி அந்த மசோதா அடுத்த இரண்டாவது கட்ட வாசிப்புக்கு நாடாளுமன்றத்திற்கு வரும் போது அதை இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் ஜமில் கிர் பாரும் கையாளுவார்.

இதற்கு முன்னதாக, மசீச தலைவர் லியோ தியோங் லாய், ஹாடியின் மசோதா நிறைவேற்றப்பட்டால் அவர் அமைச்சரவையிலிருந்து விலகிவிடப் போவதாக சூளுரைத்துள்ளார்.

ஆனால், இப்போது புத்ராஜெயா அந்த மசோதாவை அதனுடைய மசோதாவாக ஏற்றுக்கொண்ட நிலையில், பிஎன் பங்காளிக்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை உறுதியாகக் கூறுவதற்கில்லை.