தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்: முதல்வர் ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு

PANNEERSELVAM1_2399514fதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்றும், தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைக் கட்டிக் காப்போம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென பிரதமருக்கு 9.1.2017 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.

இது பற்றி மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை பெறப்படவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டுமென்று வலியுறுத்தி பல அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் பலஅரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவது பற்றிய விளக்கத்தை தமிழக மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை என கருதுகிறன்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தடை விதித்து தீர்ப்பளித்தது. 2006-ம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி நாகராஜ் என்பவரால் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே, ராமநாதபுரம் மாவட்டத்தில் மகா கும்பாபிஷேக திருவிழாவினை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம் ஒன்றை நடத்த அனுமதிக்குமாறு முனியசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஆகியவற்றுக்குத் தடைவிதித்து 29.3.2006 அன்று உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து, 2006 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த அமர்வு நீதிமன்றம் 9.3.2007 அன்று பிறப்பித்த உத்தரவில் கிராமப் புற விளையாட்டின் மீது முழுமையாக தடை விதித்தது தவறு என்றும், இதனை நெறிமுறைப்படுத்தி நடத்தலாம் என்றும் ஆணையிட்டது.

இந்த தீர்ப்பினை எதிர்த்து, இந்திய பிராணிகள் நல வாரியத்தால் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்புக் கால வழக்கு 9.7.2007 அன்று தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் 27.7.2007 அன்று தடையாணை ஒன்றை பிறப்பித்தது.

இந்த தடையினை நீக்கக் கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிராணிகள் மற்றும் மனிதர்களுக்கு எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல் நடத்திட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

உச்ச நீதிமன்றம் தனது 15.1.2008 நாளிட்ட ஆணையில் ஜல்லிக்கட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் பிராணிகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதனடிப்படையில் தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009 என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. 25.11.2010 அன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையில், மாவட்ட ஆட்சியர்கள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் காளைகள், இந்திய பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதே போன்று பிராணிகள் நல வாரியம் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை கண்காணிக்க அதன் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்றும், கால்நடை மருத்துவர்கள் குழு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து நிகழ்வுகளில் பங்குபெறும் காளைகளை பரிசோதித்து சான்று அளிப்பதுடன், காயம்படும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்றும், ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, விபத்து அல்லது காயம் அடைகின்ற ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துபவர்கள் சிறிய நிகழ்வுகளுக்கு 2 லட்சம் ரூபாயும், பெரிய நிகழ்வுகளுக்கு 5 லட்சம் ரூபாயும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் விரிவான நெறிமுறை வழங்கப்பட்டது.

இவ்வாணையினை எதிர்த்து பீட்டா என்ற அமைப்பு வழக்கு ஒன்றைத் தொடுத்தது. உச்ச நீதிமன்றம் இவ்வழக்கையும் மூலவழக்குடன் சேர்த்து விசாரிக்க ஆணையிட்டது. அவ்வப்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்த சூழ்நிலையில், 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப் பிரிவு, ஜல்லிக்கட்டு நிகழ்வு, பழக்கப்பட்ட விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துவது எனக் குறிப்பிட்டு, எனவே அவை தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்து பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் புலிகள், கரடிகள் ஆகியவைகளுடன் காளையையும் சேர்க்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 11.7.2011 நாளிட்ட அறிவிக்கையில் காளையையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஜனவரி 2012-ல் ராதாராஜன் மற்றும் பிராணிகள் நல வாரியத்தினர், காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதை தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வகுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசால் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவினை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கூடுதல் பாதுகாப்புடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.

10.1.2013-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலிருந்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது. உயர் நீதிமன்ற ஆணைகளுக்கு ஏற்ப 2013-ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உச்ச நீதிமன்றம், மத்திய அரசால் 11.7.2011 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 7.5.2014 அன்று இறுதி உத்தரவை பிறப்பித்தது.

அதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிராவில் காளைமாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை பிறப்பிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009, இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்துக்கு முரணாக அமைந்துள்ளதால் அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை முற்றிலும் தடை செய்து விட்டதால், இதனை எதிர்த்து 19.5.2014 அன்று தமிழ்நாடு அரசால் மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் 16.11.2016 அன்று தள்ளுபடி செய்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் 7.5.2014 அன்றைய தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட இயலாது என்பதால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்திட வேண்டுமென்று மத்திய அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.

7.8.2015 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு அளித்த கோரிக்கை மனுவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தார்கள். 11.7.2011 நாளிட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் காட்சிபடுத்தப்படும் விலங்காக சேர்க்கப்பட்டுள்ள காளைகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும் என்றும் 1960-ம் ஆண்டைய மிருக வதை தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் விதமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

2015-ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்த மசோதா ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்யும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஆணையின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத் தொடரில் பேசியிருந்தனர்.

எனினும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் அனுமதிக்கும் வகையிலான எந்தவித மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், ஜெயலலிதா 22.12.2015 அன்று பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். ஜெயலலிதாவின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் 7.1.2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது.

இந்த அறிவிக்கையின்படி, காளைகள் என்பது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்தது. அந்தக் காப்புரையில், உச்ச நீதிமன்றம் தனது 7.5.2014 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள ஐந்து உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தது.

எனினும், ஒருசில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததில், 12.1.2016 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

அதனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, தான் ஏற்கெனவே கேட்டுக் கொண்டபடி, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென்று ஜெயலலிதா, பிரதமரை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர், அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவாலும், தமிழக அரசாலும், என்னாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த போதும், மத்திய அரசு இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அவசரச் சட்டத்தையும் கொண்டு வரவில்லை.

பிரதமரை 19.12.2016 அன்று நேரில் சந்தித்த போது தமிழ்நாட்டின் நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை அளித்தேன். அதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டதிருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும் என வற்புறுத்தி இருந்தேன். 9.1.2017 அன்று பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திடும் வகையில் 7.1.2016 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள தனது தீர்ப்பினை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கிறேன். இந்த தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் என உறுதியுடன் நம்புகிறேன்.

தமிழகத்தின் உரிமைகளை காத்து அவற்றை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. காவிரி நதிநீர் பிரச்னை என்றாலும், முல்லைப் பெரியாறு பிரச்னை என்றாலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்றாலும், தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு அதைப் பாதுகாத்தவர் ஜெயலலிதா.

அவர் வழியில் செல்லும் நானும், தமிழக அரசும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம். இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை கட்டிக் காப்போம் என்பதை தமிழக மக்களுக்கு உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: