தடையை மீறி ஏறுதழுவுதல் நடத்த ரெடியாகிறதா தமிழக அரசு? ஓ.பி.எஸ் அறிக்கையின் பின்னணி

panneerselvamசென்னை: தமிழர்களின் கலாசாரம்,பண்பாடு கட்டிக்காக்கப்படும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எள்ளளவும் தமிழக அரசு பின்வாங்காது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளது மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக 5 பக்க அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ள பன்னீர் செல்வம் அதில் மேற்கூறிய வார்த்தைகளை முத்தாய்ப்பாய் சேர்த்துள்ளார்.

இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த கடந்த ஆண்டு கூட இப்படி ஒரு, அறிக்கை அவரிடமிருந்து வரவில்லை. கடைசிவரை நீதிமன்றத்தை கை காட்டியே மத்திய-மாநில அரசுகள் கடந்த வருடம் தப்பிவிட்டன.

துணிச்சல்

இந்த நிலையில், பன்னீர்செல்வம் துணிச்சலாக, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எள்ளளவும் தமிழக அரசு பின்வாங்காது என்று கூறியிருப்பது முக்கியமான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தன்னெழுச்சியாக மாணவர்கள் வீதிக்கு வந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ள பின்புலத்தில் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

தீர்ப்பு

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு கடந்த வருடம் வெளியிட்ட அறிவிக்கையை தடை செய்தது உச்சநீதிமன்றம். இதை எதிர்த்து மத்திய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வாதாடி வருகின்றன. தீர்ப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிருப்தி

காளையை காட்சி பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவராத நிலையில், தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராகவே வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தாமல் இருந்தால் மக்கள் மத்தியில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே மக்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதிக்கும்.

அவசர சட்டம்?

இதை கருத்தில் கொண்டு, தீர்ப்பு வெளியான பிறகு ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்து ஜல்லிக்கட்டு நடத்த ஆவண செய்யலாம். இதுகுறித்த சிக்னல் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். எனவே தைரியமாக ஓ.பி.எஸ் இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஏறுதழுவுதல்

ஒருவேளை, மத்திய அரசு கைவிரித்தால் கூட, ஜல்லிக்கட்டை ஏறுதழுவுதல் என்ற பெயரில் நடத்தி மக்களிடம் நற்பெயரை வாங்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப மாநில அரசு ஒரு அரசாணையை வெளியிடவும் வாய்ப்புள்ளதாம். இதன் மூலம், சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களிடம் நற்பெயரை ஈட்டலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் கூட ஏறுதழுவுதல் என்ற பெயரில் போட்டியை நடத்தினால் சிக்கல் இல்லை என கூறியது இதன் முன்னேற்பாடுதான் என்று கூறப்படுகிறது. மேலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் ஆதரவு தரப்படும் என பாஜக தலைவர் தமிழிசையும் கூறிவிட்டார்.

கர்நாடக வாதம்

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்காமலேயே உள்ளது. மக்கள் போராடுகிறார்கள், எங்களுக்கே தண்ணீர் இல்லை என்பது போன்ற வாதங்களை கர்நாடகா முன் வைக்கிறது. அதேபோல, மக்கள் போராடுகிறார்கள் என்று கூறிக்கொண்டு ஏறுதழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடத்தி சட்ட நெருக்கடியிலிருந்து தப்ப மாநில அரசு துணிச்சலாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொறுத்திருந்து பார்க்கலாம்.

tamil.oneindia.com

TAGS: