ரிம2.6 பில்லியன் ‘நன்கொடை’ வழக்கை மீண்டும் விசாரிப்பீர்: அபாண்டிக்குக் கோரிக்கை

hanifசட்டத்துறைத்   தலைவர்    முகம்மட்  அபாண்டி   அலி   மன்னிப்பு    கேட்க   வேண்டும்    என்று  கோரிக்கை   விடுத்துள்ள   வழக்குரைஞர்    முகம்மட்   ஹனிப்   கத்ரி    அப்துல்லா,     அவருக்குப்   பிரதமர்    நஜிப்   அப்துல்  ரசாக்   மீதான    வழக்கை    மீண்டும்   விசாரணை    செய்யும்  துணிச்சல்   உண்டா    எனவும்    சவால்   விடுத்தார்.

சிங்கப்பூர்    நீதிமன்றம்,   1எம்டிபி மீதான    வழக்கொன்றில்   சுவீஸ்   நாட்டு   வங்கி    அதிகாரி   ஜென்ஸ்   பிரெட்   ஸ்டர்ஸெனக்கர்    குற்றவாளி   என்று   தீர்ப்பளித்திருப்பதை     அடுத்து    ஹனிப்   இவ்வாறு   கோரிக்கை   விடுத்துள்ளார்.

சிங்கப்பூர்    வழக்கில்   வெளிப்பட்ட     உண்மை,   பிரதமரின்   வங்கிக்  கணக்கில்   போடப்பட்டிருந்த    ரிம2.6 பில்லியன்    தொடர்பில்   நஜிப்    குற்றம்    எதுவும்   செய்யவில்லை   என்று   அப்பாண்டி   கடந்த    ஆண்டில்   அறிவித்திருந்ததற்கு   முரணாக   உள்ளது   என்று   ஹனிப்    கூறினார்.

“நஜிப்பின்    கணக்கில்    இருந்தது    அராபியாவிலிருந்து   வந்த   நன்கொடை  என்பதால்   சட்டத்துறை   அலுவலகம்   அவர்மீது    நடவடிக்கை   எடுப்பதில்லை    என்ற  முடிவுக்கு   வந்திருப்பதாக    2016   ஜனவரி   26-ல்   அபாண்டி   வெளியிட்ட   அறிக்கையில்  உண்மையில்லை    என்பதை     சிங்கப்பூர்    நீதிமன்றத்   தீர்ப்பு   நிறுவியுள்ளது”,  என  ஹனிப்   கூறினார்.

ஸ்டர்ஸெனக்கர்,  கடந்த   புதன்கிழமை,   1எம்டிபி   சம்பந்தப்பட்ட     உண்மைகளைத்   தாம்   மறைத்ததை     சிங்கை    நீதிமன்றத்தில்   ஒப்புக்கொண்டார்.  அக்குற்றத்துக்காக     அவருக்கு   28-வாரச்  சிறையும்   எஸ்$ 128,000  அபராதமும்   தண்டனையாக   விதிக்கப்பட்டது.