1எம்டிபி ஊழலாலும் நம்பிக்கை குறைந்திருந்திருப்பதாலும் என்சிசி2 அவசியமாகிறது- நாஸிர்

nazir1எம்டிபி   சர்ச்சை     காரணமாக     கூட்டரசு    அரசாங்கத்தின்மீதும்   அதன்  முக்கிய   அமைப்புகளின்மீதும்     நம்பிக்கை   குறைந்திருப்பதால்    இரண்டாது    தேசிய    ஆலோசனை   மன்ற(என்சிசி2)த்தைக்   கூட்டுவது   அவசியமாகும்    என்கிறார்   சிஐஎம்பி   குழுமத்   தலைவர்    நாஸிர்  ரசாக்.

என்சிசி2   அமைக்க   வேண்டும்    என்ற   எண்ணத்தைக்   கடந்த     செப்டம்பர்  மாதமே   முன்வைத்த   நாஸிர்,   1எம்டிபி   சர்ச்சையால்   அதிகாரத்தைக்  கைப்பற்றும்  போட்டி   தீவிரமடைந்துள்ளது    என்றார்.

“அரசியல்வாதிகள்   எதையும்   செய்யத்   துணிவார்கள்,  இன,  சமய   வேறுபாடுகளைப்   பெரிதுபடுத்திக்   காண்பிக்க   முயல்வார்கள்.  அந்நிலையில்   அது   ஆபத்தாக   முடியும். ஏற்கனவே    அதைக்   கண்டிருக்கிறோம்.

“இன்னும்   அந்த   நிலையை   எட்டவில்லை,  ஆனால்    அதற்கான     அறிகுறிகள்   தெரிகின்றன    என்றே   நினைக்கிறேன்”,  என   மலாய்  மெயிலுக்கு   அளித்த   நேர்காணலில்   நாஸிர்   கூறினார்.

என்சிசி-யை   1970-இல்  முதன்முதலில்    அமைத்தவர்   நாஸிரின்  தந்தை    இரண்டாவது    பிரதமர்   அப்துல்   ரசாக்   உசேன்.  அதுதான்  புதிய   பொருளாதாரக்  கொள்கை(என்இபி)யை   உருவாக்கியது.

என்இபி-இல்   பல   அத்துமீறல்கள்   நிகழ்ந்திருப்பதாகக்   கூறிய    நாஸிர்,   நடப்பு    சமூக-அரசியல்   சூழலுக்கு   அது  பொருத்தமற்றது    என்றார்.

46-வயதான    அது    காலத்துக்கு  ஒவ்வாததாகிவிட்டது,  ஆரோக்கியமற்ற   நடைமுறைகளை  மூடிமறைக்க  அது    தவறாகப்  பயன்படுத்தப்படுகிறது   என்று  அவர்   சொன்னார்.