போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை சர்ச்சை..! ஜனாதிபதி – நல்லிணக்க செயலணி அடுத்த வாரம் சந்திப்பு

maithriபோர்க்குற்ற விசாரணைக்கு கலப்புப் பொறிமுறையை நல்லிணக்கச் செயலணியின் அறிக்கை பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் செய ல ணியின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செயலணியின் அறிக்கை வெளியீட்டில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொள்ளவில்லை. செயலணியின் பரிந்துரைக்கு தேசிய அரசின் அமைச்சர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு சூழலிலேயே, நல்லிணக்கச் செயலணியின் 11 உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறப் போவதை, நல்லிணக்கச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து உறுதி செய்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங் கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பொறிமுறைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் கருத்து அறிவதற்காக நல்லிணக்கச் செயலணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்டது.

மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தி கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. அறிக்கை கையளிப்புக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல தடவைகள் நேரம் கோரப்பட்டன.

மூன்று தடவைகள் இறுதி நேரத்தில் அறிக்கை கையளிப்பு இடைநிறுத்தப்பட்டன. டிசம்பர் மாதம் 21ஆம் திகதி இறுதித் தடவையாக அறிக்கை கையளிப்பு ஒத்திவைக்கப்பட்ட போது, ஜனவரி 3 ஆம் திகதி அறிக்கை கையளிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

அன்றைய தினமும் ஜனாதிபதி மைத்திரிபால அறிக்கையைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்று நல்லிணக்கச் செயலணி அறிவித்திருந்தது.

ஜனவரி 3ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால அறிக்கையைப் பெற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அந்த நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. ஆனாலும், அறிக்கை திட்டமிட்டபடி அவரின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

போர்க்குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கு தேசிய அரசின் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது நிலைப்பாட்டை இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

இந்த நிலையில் நல்லிணக்கச் செயலணி யின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: