தைப்பூசம் ஒரு பொழுதுபோக்கோ வர்த்தக நிகழ்ச்சியோ அல்ல, சேவியர் கூறுகிறார்

 

thaipusamஒற்றுமையுடன் அனைத்து பக்தர்களின் நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்கும் எந்தப் பயமும் பாதகமும்இன்றி அனைவரும் தைப்பூசப் பெருவிழாவைக் கொண்டாட வாழ்த்துகள் கூறுகிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

இவ்வாண்டு பத்துமலை  தைப்பூசத் திருவிழாவின் போது நடத்தபடும் வியாபாரச் சந்தையில் ஓர் இனத்துக்குச் சிறப்பு சலுகை என்ற  அடிப்படையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய  அரசாங்கம் ஏற்பாடு  செய்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் குறித்துச் சிலர் சமூக ஊடகங்களின் தங்களின் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால், இது குறித்து விசாரித்ததில்  எந்த உண்மையும்  இருப்பதாகத் தெரியவில்லை.

 

அதே வேளையில், பத்துமலை கோவில் வேலிக்கு வெளியில் சாலை ஓரங்களில் போடப்படும் கடைகளுக்குச் செலாயாங் நகராண்மைக் கழகம் விதித்துள்ள கட்டணம் ரிங்கிட் 2000 குறித்துப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சில அரசுசார்பற்ற  அமைப்புகள், அங்குச் சேவை மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்களுக்குக்கூட கட்டணம் விதிக்கப்படும் கரிசனமற்ற போக்கைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

நாம் எப்பொழுதும் சேவை அடிப்படையிலான அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மாற்று திறனாளிகள் நடத்தும் சேவை/வியாபாரத் துணை மையங்கள் விவகாரத்தில் கரிசனமுடனே நடந்து வந்துள்ளோம். கடந்த காலங்களில் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் இடம் அளித்து வந்துள்ளதை இச்சேவை மையங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

பத்துமலை தைப்பூசம் ஒரு பொழுதுபோக்கு அல்லது வர்த்தக நிகழ்ச்சியல்ல என்பதை அனைவரும்  கவனத்தில் கொள்ள வேண்டும். அது ஒரு சமய விழா.  ஆக, அங்கு அனைத்து தரப்பினரிடமும் அதிகப்படியான அன்பு, அனுசரணை, கரிசனம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். அதில் கோவில் நிர்வாகம், போலீஸ் மற்றும் நகராண்மைக்கழகம் ஆகியவற்றின் பங்கும் அளப்பரியது.

 

அதே வேளையில், அங்கு ஏற்படும் போக்குவரத்து, சுற்றுப்புறத் தூய்மைக்கேடு போன்ற பிரச்சனைகளைக் களைவதிலும் அனைவருக்கும் பங்குண்டு. அங்கு அதிக  அளவில் குப்பைகள்  சேர்வதாகவும்  அதனை அகற்ற  அதிகச் செலவு பிடிப்பதாகவும், தற்காலிகக் கடை உரிமம் கட்டண உயர்வுக்கு நகராண்மைக் கழகம் கூறி வரும் காரணங்களில் ஒன்றாக உள்ளது.

 

தற்காலிகக் கடை உரிமம் கட்டண உயர்வுக்கு இங்கு அக்கட்டணச் சுமையைக் கோவில் வேலிக்கு வெளியில் வியாபாரம் செய்பவர்கள்  மற்றும் சேவையில் ஈடுபடுவோர் மட்டும் சுமக்க வேண்டும் என்பதில்லை. ஆலய வேலிக்கு உள்ளே செயல்படும் கடைகளுக்கு உரிமம் கட்டணம் வசூலிக்க  நகராண்மைக்கழகத்திற்கு உரிமை மறுக்கப்படுவதனால் இந்தச் சுமை முழுவதுமாக வெளியில் உள்ள வியாபாரிகள் மீது திணிக்கப்படுவதாகத் தெரிகிறது.

 

நாம்  நகராண்மைக்கழகத்திடம்  பேச்சுவார்த்தை நடத்தும் போது, பத்துமலை  ஆலய நிர்வாகம் அதன் வேலிக்குள் உள்ள  கடைகளுக்கு  8 முதல் 10 ஆயிரம்  ரிங்கிட்டுகள் வரை கட்டணம் வசூலிப்பது நமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

ஆக, ஆலயம் விதிக்கும் இப்படிப்பட்ட கட்டணங்கள் மறைமுகமாக வெளியில் உள்ள வியாபாரிகளைப் பாதிப்பதை அவர்களும் கவனத்தில் xavierஎடுத்துக்கொள்ள வேண்டும் என்றாரவர். இது குறித்துத் திங்கட்கிழமை செலயாங் நகராண்மைக் கழகத் தலைவரைத் தாம் சந்திக்க இருப்பதாகவும் சேவியர் குறிப்பிட்டார்

 

தாம்  ஆட்சிக்குழு உறுப்பினராக  இருந்த போது கூடியவரையில் கட்டணங்களைக் குறைவாகவே வைத்திருக்க நகராண்மைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்ததாகவும் அதற்கு அன்றைய  நகராண்மைக் கழக உறுப்பினர்களும்  துணையாக இருந்தனர் என்றும் சேவியர் தெரிவித்தார்.

 

அதே வேளையில், இப்போது பதவியில் இருக்கும் செலயாங் நகராட்சி  உறுப்பினர்களும் கடந்தகால நடைமுறைகளைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார், மக்களுக்கு நீர், உணவு மற்றும் சேவைகள் வழங்கும் அரசுசார அமைப்புகளுக்கு கோவில் நிர்வாகமும்  இடமளித்து ஊக்குவிக்க வேண்டும், ஊராட்சி மன்றமும் சுமையை அதிகரிக்கும்  செயல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்று ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அறிவுரை கூறினார்.