பினாங்கில் மலாய்க்காரர்கள் மட்டுமல்ல, எல்லா இனங்களும் ஒதுக்கப்படுகிறார்கள் என்று இப்போது கூறுகிறார் கு நான்

 

Kunandeniesபினாங்கு மாநில அரசு ஒதுக்கி வைத்திருப்பது மலாய்க்காரர்கள் மட்டுமல்ல என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று கூறினார்.

ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது மலாய்க்காரர்கள் மட்டுமல்ல. பினாங்கில் அனைத்து இனங்களும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று தாம் கூறியதாக தெரிவித்த கு நான், “நான் அனைவரும் என்று சொன்னேன்” என்று அவர் கோலாலம்பூரில் இன்று சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

பினாங்கு அரசு மலாய்க்காரர்கள் பற்றி அக்கறைப்படுவதில்லை என்று கு நான் கூறியதாக அவருக்கு எதிராக சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் போலீஸ் புகார் செய்திருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா கடந்த சனிக்கிழமை வெளியிட்டிருந்த செய்தியின் அடிப்படையில் லிம் போலீஸ் புகார் செய்தார். பெர்னாமா செய்தி இப்படி கூறுகிறது: “பினாங்கில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அவர்கள் (மாநில அரசு) மலாய்க்காரர்களைப் பற்றி அக்கறைகொள்வதில்லை”.

புக்கிட் குலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் அமைச்சர் கு நான் அவர் கூறியது பற்றி போலீசாருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இன்று காலையில் கூறினார். மேலும், கு நான் கூறியிருப்பது தேசநிந்தனையானது என்று பொருள் கொள்ளலாமா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என்றாரவர்.

இது குறித்து பதில் அளித்த கு நான், இவ்விவகாரம் குறித்த விசாரணையில் தாம் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்கப்போவதாக கூறினார்.

போலீசார் தம்மை அழைத்துள்ளதாக கூறிய கு நான், “வாக்குமூலம் அளிப்பேன், பிரச்சனை இல்லை”, என்றார்.

“நான் சொன்னது, ‘எனது விருப்பம்’. பினாங்கை நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தயவு செய்து, எனது அறிக்கையைச் சரியாகப் படியுங்கள்”, என்று கு நான் மேலும் கூறினார்.

“எதிரணிக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் எனது அறிக்கையைச் சரியாகப் படிப்பதே இல்லை”, என்றாரவர்.

கு நான் இந்த விவகாரத்தை பெப்ரவரி 1 இல், பிஎப்எம் 89.9 துடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலில் முதன்முறையாக எழுப்பினார்.