10 நாட்களுக்குப் பின் தலைமைச் செயலகம் வந்த ஓபிஎஸ்… வழியெங்கும் மக்கள் எழுச்சி!

ops8சென்னை: ஓ.பன்னீர் செல்வம் இன்று தலைமைச் செயலகம் சென்றுள்ளார். ராஜினாமா செய்த பின்னர் பத்து நாட்கள் கழித்து தலைமைச் செயலகம் வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனம் கிளம்பிய போது அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்.

தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக்குப் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் தீ விபத்து ஏற்பட்டுள்ள மீனவர் குப்பத்தை பார்வையிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின்னர் கடந்த 5ஆம் தேதியன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர் செல்வம். 7ஆம் தேதியன்று இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த ஓபிஎஸ், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தாக கூறினார். இது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்த நிலையில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. ஓபிஎஸ் தன் இல்லமான தென்பெண்ணை இல்லத்தை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை. ஒரே ஒரு முறை ஆளுநர் இல்லம் சென்றதோடு சரி. அவரைத் தேடித்தான் ஏராளமானோர் அவரது வீட்டிற்கு வருகின்றனர்.

சசிகலா போராட்டம்

ஜெயலலிதா இருந்த வரை கோவில்களுக்கு மட்டுமே போன சசிகலா, இப்போது ஜெயலலிதா நினைவிடம், கட்சி தலைமை அலுவலகம், கூவத்தூர் ரிசார்ட் என ஓடி வருகிறார். முதல்வர் பதவியில் அமரும் வரை ஓயமாட்டேன் என்று கூறி வருகிறார் சசிகலா. நாங்கள் சிங்கம் போன்றவர்கள் என்றும் பேட்டி தருகிறார்.

ஓபிஎஸ் பதிலடி

இதற்கு பதிலடி தரும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தனர் சசிகலா முதல்வராவதை எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை என்றார். சசிகலா ஏன் கூவத்தூர் சென்று வருகிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

எம்எல்ஏக்களை வெளியே விடுங்கள்

கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்னுடன் பேசிக் கொண்டுள்ளனர் ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் 4 பேரை காவலுக்கு நிறுத்தியுள்ளனர் அம்மா ஏற்படுத்திய ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய எண்ணம் மட்டுமே என்னிடம் உள்ளது. எம்எல்ஏக்களை சுதந்திரமாக தொகுதிக்கு அனுப்பி வைத்து மக்களின் கருத்துக்களை கேட்டு வரச்சொல்லாமே என்று கூறினார்.

தலைமைச் செயலகம் செல்வேன்

தொடர்ந்து பேசிய அவர், இன்று தலைமைச் செயலகம் செல்ல இருப்பதாகவும் கூறினார். கடந்த 5ஆம் தேதி ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம் வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை. புதன்கிழமையில் இருந்து தனது ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

வழியெங்கும் வரவேற்பு

ஓ.பன்னீர் செல்வம் செல்லும் வழியெங்கும் மக்கள் கூடிநின்று வரவேற்பு அளித்தனர். அவருடைய கார் மீது பூக்களைத்தூவி வரவேற்பு அளித்தனர். ஓபிஎஸ் வாகனம் செல்லும் வழியில் தொண்டர்கள் நிறுத்தும் போது தனது வாகனத்தை நிறுத்தி அவர்களின் வாழ்த்துக்களை, ஆதரவினைப் பெற்றுக்கொண்டார்.

முக்கிய கையெழுத்து

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இன்று தலைமைச் செயலகம் வந்துள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பதற்கான பைல்களில் கையெழுத்திடலாம் என கூறப்படுகிறது.

கே.வி. குப்பம் செல்கிறார்

தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் எண்ணூர் கே.வி. குப்பத்திற்கு முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் செல்லப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.வி.குப்பத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குடிசைகள் எரிந்து சாம்பலாகின. இந்த இடத்தை முதல்வர் ஓ.பிஎஸ் இன்று பார்வையிட உள்ளார்.

tamil.oneindia.com

TAGS: