மோடியின் சக்கர வியூகம்…! கிடுக்குப்பிடிக்குள் தமிழகம்? சசிகலாவின் ஆட்டம் அடங்(க்)கும் நேரம்?

narendra_modizதமிழகத்தை அண்மைய நாட்களாக அரசியல் பரபரப்பு மக்களை வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவிடாமல் கட்டிப்போட்டிருக்கிறது.

சுவாதி கொலையில் ஆரம்பித்த பரபரப்பு முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனை அனுமதி, அவரின் மரணம், மரணத்தில் ஏற்பட்ட மர்மம், அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுப்போராட்டம், இப்பொழுது யார் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்ற சலசலப்பில் வந்திருக்கிறது.

செய்திச் சேனல்களைப் பார்த்தபடியே இருக்கிறார்கள் மக்கள். நிமிடத்திற்கு நிமிடம் விசேட செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரின் முகத்திலும் ஒருவகையான பதற்றம் தெரிவதை உணரமுடிகிறது.

ஆனால், இந்தப் பரபரப்பும், தமிழகத்தை ஒருவகையான தேக்கத்திலும் வேண்டுமென்றே ஆளும் மத்திய அரசாங்கம் வைத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றார்கள்.

அவர்களின் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான நியாயமான வாதங்களும் ஏற்புடையதாகவே தோண்றுகிறது.

ஆளுநர் நியமனமும் சர்ச்சையும்?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்குப் புதிய ஆளுநர் நியமிக்கப்படுகிறார். முன்னர் இருந்து ஆளுநர் ரோசையாவின் பதவிக்காலம் முடிய அவருக்குப் பதிலாக மகாராஷ்ராவின் ஆளுநரை மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கும் பொறுப்பு ஆளுநராக நியமிக்கிறது.

பொதுவாக இந்திய அரசியலமைப்பின்படி, ஒரு மாநிலத்திற்கு பொறுப்பான ஆளுநரை நியமிக்கும் பொழுது அவர் அண்டை மாநிலத்திற்கான ஆளுநராக இருக்கவேண்டும். ஆனால், தமிழகத்திற்கும் மகாராஷ்ராவிற்கும் இடையிலான தூரம் என்பதை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.

தவிர, ஒரு மாநிலத்திற்கான ஆளுநரை பொறுப்பாக நியமிக்கும் பொழுது குறைந்தது ஒருவாரத்திற்கு மட்டுமே அவர் பொறுப்பு ஆளுநராக இருப்பார். ஆனால் வித்யாசார் ராவ் தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டு ஐந்து மாதங்களைத் தாண்டி இது ஆறாவது மாதமாகியிருக்கிறது.

இதைக் குறிப்பிட்டு வாதிடுவோர் இன்னொரு விடையத்தையும் சுட்டிக்காட்டத் தவிறவில்லை.

பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிகப்படுகிறார்.

எனினும், அவரின் நிலை என்ன? என்ன நோய் என்ற மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவந்தநிலையில், அவரின் பொறுப்புக்களை ஓ.பன்னீர்செல்வம் கவனித்துக்கொள்கிறார்.

இந்தநிலையில் தான் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் நிறைவேற்றாமல் இருந்த உதய் திட்டம் உட்பட்ட முக்கியமான திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அத்திட்டங்களை அமுல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக மறுத்திருந்தார். மோடி அரசின் இச்செயற்றிட்டங்களுக்கு சவால் விடுவதாக அமைந்திருந்தது ஜெயலலிதாவின் செயற்பாடுகள்.

யார் இந்த ஆளுநர்?

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் யார்? அவரின் அரசியல் பின்புலம் என்ன என்பது குறித்தும் இப்பொழுது அலசப்பட்டுவருகிறது.

முன்னதாக அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் என்றும் தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவே இன்று பெரும் சந்தேகத்தை எழுப்புவதற்கான காரணமாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் இவ்வளவு பெரிய அரசியல் வரலாற்றில் பெரும் குழப்பங்கள் சூழந்திருக்க, மத்திய அரசாங்கம் நிரந்தர ஆளுநரை நியமிக்காது எதற்காக பொறுப்பு ஆளுநரைக் வைத்திருக்கிறது?

தமிழகத்தில் நிகழும் இவ்வளவு அரசியல் சிக்கல்களுக்கும் இங்கிருந்தே தீர்வு காண்பதற்கான ஒருவராக ஆளுநர் இல்லாமல், அவர் இரு மாநிலங்களையும் எவ்வாறு கவனிப்பார். இதில் பெரும் அரசியல் சூழ்ச்சி நடப்பதாக குற்றச்சாட்டக்கள் எழுந்திருக்கின்றன.

இதுவொருபுறமிருக்க, அரசியல் சட்டதிட்டங்களின்படி, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துவருகிறார்.

எனில், யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறதோ அவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என்னும் சட்டம் இங்கே மீறப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் பன்னீர்செல்வமும், பொதுச் செயலாளர் சசிகலாவும் ஆளுநரைச் சந்தித்து பேசி ஒருவாரமாகப்போகிறது. இதுவரை ஆளுநர் எந்த முடிவினையும் அறிவிக்கவில்லை.

இந்த மௌனம் ஏன்?

தமிழகத்தில் இந்த பரபரப்பிற்குள் மத்திய அரசாங்கம் ஏதோ ஆதாயம் தேடுகின்றது என்னும் குற்றச்சாட்டை மறுத்துப்பேசுவோர் மிகக்குறைவானவர்களே இருக்கிறார்கள்.

ஜெயலலிதா இருந்த காலத்தில் தங்களால் செய்ய முடியாதவற்றை அவரின் இழப்பினைப் பயன்படுத்தி செய்ய முயற்சிக்கிறது மத்திய அரசு.

பன்னீர்செல்வத்தை முதல்வராக்க மோடி ஆதரவு?

இதேவேளை தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக்க மத்திய அரசாங்கமும், பிரதமர் மோடியும் விரும்புவதாக குறிப்பிடும் அரசியல் விமர்சகர்கள்,

சில யதார்த்தமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றார்கள். அதிமுகவில் சசிகலா முதலமைச்சராவதைக்காட்டிலும், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக அமர்வது மத்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாவார் என்பது அவரிகளின் கணக்கு.

இதனால் தான் சசிகலாவின் கோரிக்கைக்கு பதில் வழங்காமல் ஆளுநர் மௌனமாக இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தைப் பன்னீர்செல்வம் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

இந்தியாவில் தமிழகத்தைத் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் ஓரளவேனும் ஆளும் பாரதிய ஜனாதாக் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மக்கள் அக்கட்சியினைப் புறக்கணித்திருக்கிறார்.

இதன்விளைவாக அவர்களுக்கு இந்தியாவின் ஒரு மாநிலம் பெரும் தலையிடியாக இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

அந்த இடைவெளியை எப்படியேனும் நிரப்ப வேண்டும் என்று கனவு கண்டவர்களுக்கு ஜெயலலிதாவின் மரணம் மிகப்பெரும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை பிரதமர் நரேந்திர மோடி பெரும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சில நாட்களில் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்படவிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாக்கிருஸ்ணன் குறிப்பிட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்ட அந்த அரசில் மாற்றம் இதுதான் என்று விவாதிப்போர்களும் இருக்கிறார்கள்.

எதுவாயினும், தமிழகத்தில் இத்தனை பரபரப்புக்கள், குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் இல்லாமல் இல்லை.

பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க பிரதமர் விரும்புவதாக தகவல். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில், நாளை தினம் காலை 10.30 மணிக்கு சொத்துக் குவிப்பு வழக்கிற்கான தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இந்த வழக்கின் முடிவுகள் சசிகலாவிற்கு பாதகமாக வரும் என்றும். அதற்குப் பின்னர் பன்னீர்செல்வம் முதல்வராவதற்கு தடையேதும் இருக்காது என்கிறார்கள் சட்டவல்லுநர்கள்.

நாளை வெளியாகும் தீர்ப்பின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பன்னீர் செல்வம், சசிகலா இருவரும் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்களாயின் தமிழகத்தை கடவுள் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்கிற கசப்பான வார்த்தைகளை சொல்லுகிறார்கள் தமிழகத்தின் முன்னாள் அரசியல்வாதிகள்.

எது எப்படியிருப்பினும், முன்னாள் முதலமைச்சரின் இழப்பின் காரணமாக ஏற்பட்ட இந்த அரசியல் நெருக்கடி தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல.

தமிழகத்தை நோக்கி தொடுக்கப்பட்டிருக்கும் சக்கர வியூகத்தை உடைப்பதற்கான சிறந்த தலைமை இன்னமும் உருவாகவில்லை. மத்திய அரசாங்கம் தனது வியூகத்தை சரியாக போட்டிருக்கிறது.

இவ்வளவு காலமும் எதையெல்லாம் எதிர்த்தார்களோ அவையெல்லாம் இனிநடக்கப்போகின்றன.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு இதுவரைகாலமும் ஊர்வலம் நடத்தக் கூட அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அது கூட இன்று நடந்திருக்கிறது. இனி இதுபோன்ற பல நிகழ்வுகள் காத்திருக்கின்றன.

அவற்றுக்கான அத்தனை பொறுப்புக்களையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பொதுச் செயலாளர் சசிகலாவும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

-http://www.tamilwin.com

TAGS: