மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும்

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார்.

அத்துடன் மனித கடத்தல் காரர்களுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும்.

மேலும் காணாமல் போனோர் குறித்து இனங்காண்பதற்கு காணாமல் போனவர்களுக்கான அலுவலம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டிரன்புல்லை சந்தித்து பேசிய பின்னர் நடந்த இரு நாட்டு தலைவர்களின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைக்கு வருமாறு அவுஸ்திரேலிய பிரதமருக்கு ரணில் அழைப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலியா பிரதமர் மெல்கம் டிரன்புல்லுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை கன்பெரா நகரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் வைத்து அவுஸ்திரேலிய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியே போது அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

1954 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் விஜயத்திற்கு பின்னர் இலங்கை பிரதமர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்வதானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விஜயமாக அமைந்துள்ளது.

அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மேலும் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் 19 மரியாதை வேட்டுக்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

 

TAGS: