தமிழ் மக்கள் தொடர்பில் தென்னிலங்கை மக்கள் புரிந்துகொள்ளவார்களா…?

இலங்கைத் தீவில் பல் இன மக்கள் வாழ்கின்றனர். இருப்பினும் கடந்த 65 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டின் இரு தேசிய இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கசப்புணர்வுகள் பல படிப்பினைகளை தந்திருக்கின்றது.

கடந்த 30 வருடமாக இந்த நாடு போரை சந்தித்திருக்கின்றது. இந்த நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டு தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது.

இந்த நாட்டில் வாழ்ந்த பலர் தமது சொந்த மண்ணில், சொந்தங்களுடன் சந்தோசமாக வாழ முடியாதவர்களாக அன்னிய தேசங்களில் அகதிகளாகவும், தொழிலாளர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

தென்னிலங்கை, வடக்கு – கிழக்கு பிரதேசம் என்ற பிரிவினைவாத சிந்தனைகள் தோற்றம் பெற்றிருக்கின்றது.

இவை எல்லாவற்றுக்கும் தமிழ் தேசிய இனம் மற்றும் சிங்கள தேசிய இனம் என்பவற்றுக்கிடையிலான முரண்பாடே காரணம் என்பதை மறுத்துவிட முடியாது.

இன்றைக்கு 69 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் ஆட்சியுரிமையை பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் பெரும்பான்மை இனத்தவரின் கையில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

 

 

அதற்கு முன்னர் பிரித்தானியரின் காலத்தில் அரசியலமைப்புக்கள் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் இருந்து தமிழ், சிங்களம் என்ற பிரிவினைவாத சிந்தனைகள் தோற்றம்பெற்றிருந்தது.

சிங்கள பௌத்த மேலாதிக்கவாத சக்திகள் அரசியல் அமைப்புக்களில் தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் புறக்கணித்ததன் விளைவாக இரு இனங்களும் தனித்தனி அரசியல் கொள்கையின் கீழ் செயற்பட்டிருந்தன.

அந்தநிலை சுதந்திரம் அடைந்த பின் தீவிரம் அடைந்து தமிழ் தேசிய இனம் ஒரு விடுதலைக்கானபோரை நடந்தவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியது.

ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கான ஜனநாயக வழி மற்றும் ஆயுத வழிப் போராட்டமானது சிங்கள இனத்திற்கு எதிரான போராட்ட மல்ல.

அது தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பௌத்த மேலாதிக்க அரசியல் சக்திகளுக்கும், அவர்களது ஏவல்படைகளாக தொழில்பட்ட இராணுவத்திற்கும் எதிரான போராட்டமே. இதனை தென்னிலங்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்கள மக்கள் தமது எதிரிகள் என்ற மனநிலை தமிழ் மக்களிடம் இல்லை. அதே மனநிலை தென்னிலங்கை மக்களிடமும் ஏற்பட வேண்டும்.

இரு இனங்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் உருவாகுவதற்கு காரணம் ஆளும் வர்க்கமே. அவர்கள் அடக்கி ஆளும் பௌத்த மேலாதிக்க வாத சிந்தனைகளை தென்னிலங்கை மக்கள் மத்தியில் விதைத்திருக்கிறார்கள்.

-http://www.tamilwin.com

TAGS: