அன்று நடந்தது வேறு இன்று நடப்பது வேறு! சிதையும் தமிழகம்! பார்வைக்கு

pann_edappadi1நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழகம், இன்று உலகம் பார்த்துச் சிரிக்கும் அளவிற்கு சிறப்பிழந்து கொண்டிருப்பதை இன்றைய இளைய சமூகத்தினர் பெரும் வேதனையோடு எதிர்கொள்கிறார்கள்.

இந்தியா முழுவதற்கும் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுத்தது தமிழக அரசியல் வரலாறும், தமிழக அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளும்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு உதாரணமான மாநிலமாக இருந்த தமிழகத்தை இன்று சின்னாபின்னப்படுத்தியவர்கள் யார்?

அதிகார ஆசையும், பதவிமோகம் கொண்ட சில அரசியல்வாதிகளின் கேலிக்கூத்தின் பிடிக்குள் அகப்பட்டு, வரலாற்றையும் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையையும் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள்.

இந்திய தேசத்தில், முதல் முதலாக மாநிலங்களுக்கும் மக்களுக்கும் திணிக்கப்பட்ட ஹிந்தி கட்டாயமாக்கும் விடையத்தில் முதல் முதலாக எதிர்த்தது தமிழகம்.

அன்றைய தமிழக மாணவர்கள் தங்கள் உரிமைக்காக கிளர்ந்து எழுந்தார்கள். வரலாற்றை அன்று மாற்றினார்கள். தமிழகத்தில் எழுந்த எழுச்சியைப் பார்த்து இந்திய மத்திய அரசாங்கம் அச்சத்தோடு பார்த்தது.

அதற்குப் பின்னர் தமிழக மக்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டங்கள் ஏனைய மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்ததுடன், தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றின.

தவிர, பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று தமிழகத்தை ஏனைய மாநிலத்தவர்கள் திரும்பி பார்க்கும் அளவிற்கு தமிழகம் பெரும் வளர்ச்சி கண்டிருந்தது.

இந்தியாவின் மற்றைய மாநிலங்களில் நடைபெறும் கலவரங்கள், மதச்சண்டைகள் என்று தமிழகத்தை காப்பாற்றியவர்களில் பெரியாரின் பங்கும் அளப்பெரியது.

ஆனால், இன்று நிலைமை வேறு, தமிழக அரசியலை இந்திய முழுவதும் மிகக்கேலியாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சமூக வலைத்தளங்களிலும், இந்திய தேசிய ஊடகங்களும் நிமிடத்திற்கு நிமிடம் தமிழகத்தின் இன்றைய செய்திகள் விசேடமாக ஒளிபரப்பபடுகின்றன.

கடந்த தை மாதம் தமிழகத்தை உலகம் முழுவதும் திரும்பிப்பார்த்தது. வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு ஒரு அறவழிப்போராட்டத்தை தமிழக இளைஞர்கள் நடத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

ஆனால், இத்தனை வரலாற்றையும் இன்றைய அரசியல்வாதிகள் தவிடு பொடியாக்கிவிட்டிருக்கிறார்கள்.

இளைஞர்களும், மாணவர்களும் அரசியல் குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் தெளிவடைந்து கொண்டிருக்கையில் அரசியல்வாதிகள் அதில் இருந்து விலகி, தமிழகத்தை சீரழிப்பது வேதனை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

இந்த ஆண்டு, ஜெயலலிதாவின் இடத்தை யார் இட்டுச் செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டு, அது தமிழகத்தின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

தமிழகத்திற்கு நிரந்தர முதல்வர் இல்லை. நிரந்தர ஆளுநர் இல்லை. என்ற நிலையில், செயற்படுத்த வேண்டிய அனைத்து மக்கள் பணியும் முடங்கிப் போய்க்கிடக்கிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையில் அடங்கியிருக்கிறது. ஆனால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்கிறது தெரியாமல் நடந்து கொள்வதை இணையவாசிகள் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கூவத்தூரில் தங்கயிருக்கும் அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களை நம்பி வாக்களித்த மக்களின் தொகுதிச் சென்று மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்பவர்களாகத் தெரியவில்லை.

மக்களால் நான் மக்களுக்காக நான் என்று தங்களது தலைவி சொன்னதைக் கூட அவர்கள் இன்று கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. மக்களின் வாக்கைப் பெற்றவர்கள், மக்களின் வார்த்தைகளை கேட்பவர்களாக இல்லை.

எத்தனையோ நபர்கள் தமது தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு தெரிவிக்க, அதற்கு யாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று திமிராக பேசுகிறார்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்.

மக்களை மதித்த தலைவர்களும், மக்களால் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்களும் வாழ்ந்த இந்த நாட்டில் இப்படியுமான தலைவர்கள் இருப்து தமிழுக்கும், தமிழினத்திற்கும் ஆபத்து என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் நன்கு இனம்கண்டுவிட்டார்கள்.

நாளை சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். அதே நிலைதான் ஓ.பன்னீர்செல்வத்திற்கும்.

நாளைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனாலும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் நாளை தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழும்.

திமுக தன்னுடைய ஆதரவு எவருக்கும் இல்லை என்று சொல்லியிருக்கிறது. அதிமுகவில் பன்னீர், எடப்பாடி என்று இரு அணிகள் இருக்கின்றன.

இந்த இரு அணியும் நாளை தங்கள் பலத்தை நிரூபிக்கவில்லையாயின் ஆட்சியை கலையும் ஆபத்தும் இருக்கிறது. அப்படி தமிழகத்தில் ஆட்சி கலையுமாயின் ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவரப்படும்.

அப்படி ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டால், ஐந்தாவது தடவையும் ஆட்சிக் கலைப்பை பெற்ற மாநிலமாக தமிழகம் வரலாற்றில் இடம்பிடித்துவிடும்.

ஒரு பக்கம், தமிழகத்தில் எப்படியேனும் கால்பதித்து விடவேண்டும் என்னும் ஏக்கத்தோடு இருக்கிறது மத்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனாதாக் கட்சி.

ஜனாதிபதி ஆட்சியின் கீழ் தாங்கள் நினைத்த அத்தனையையும் செய்துமுடிப்பதற்கு அவர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

ஆனால் அவற்றை அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை. இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் தனித்துவமாக காணப்படும் தமிழகத்தை சிதைப்பதை விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது.

எதுவாயினும் இதுவரை கட்டிக்காத்த அரசியல் நாகரிகத்தையும், மக்கள் பணிகளையும் இன்றைய அரசியல்வாதிகள் காப்பாற்றுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நாளை அதற்கான முடிவு தெரியும். சட்டசபை நாளை 11மணிக்கு கூடுகிறது. அங்கு எடப்பாடி பழனிச்சாமியா? ஓ.பன்னீர்செல்வமா? இல்லை குடியரசுத் தலைவர் ஆட்சியா என்பதை நாளை அறிந்து கொள்ளலாம்.

ஆனால், அடுத்த தேர்தலில் இன்று இருக்கும் அதிமுக வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும் என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

நல்ல தலைமையில்லாத கட்சியையும், மக்கள் நலன்களை விரும்பாத அரசியல்வாதிகளையும் மக்கள் புறக்கணிப்பார்கள். அதை இன்னும் சில காலங்களுக்குப் பின்னர் தெளிவாகப் பார்க்கமுடியும்.

-http://www.tamilwin.com

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் ஒருவரால் வழங்கப்பட்டு 17 Feb 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

TAGS: