அரசியல் நோக்கம் கொண்ட சட்டம் 355 பேரணி சரியானதல்ல, மகாதிர் கூறுகிறார்

 

not rightசட்டம் 355 பேரணியின் ஏற்பாட்டாளர்கள் மறுத்திருந்தும் பெர்சத்துவின் தலைவர் மகாதிர் நேற்று நடைபெற்ற சட்டம் 355 பேரணியை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறினார்.

நேற்றைய பேரணியில் பங்கேற்றவர்கள் ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355க்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்த போதிலும், அப்பேரணி ஏற்பாட்டாளர்களின் நோக்கங்கள் இன்னும் கேள்விக்குரியதே என்று மகாதிர் கூறினார்.

“இஸ்லாத்தில் உனது நோக்கம் மிக முக்கியமானது. (பேரணியின்) நோக்கம் 14 ஆவது தேர்தலில் வெற்றி பெறுவது என்றால், அது தவறானது.

“இஸ்லாத்தை நிலைநிறுத்துதல் என்றால், அது சரியானது.

“ஆனால், அது அரசியல் நோக்கமுடையதாகத் தெரிகிறது. அப்படி என்றால் அது தவறானதாகி விடுகிறது”, என்று மகாதிர் கோலாலம்பூர் செராஸில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சட்டம் 355 க்கு திருத்தங்கள் செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதற்கு ஆதரவு திரட்டுவதற்காக பாஸ் தலைமையிலான ஒரு பேரணி நேற்று பாடாங் மெர்போக்கில் நடைபெற்றது.

அந்த மசோதா மீதான விவாதம் மார்ச் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற தொடர் கூட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.