தமிழக அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம்: தா.பாண்டியன்

ta.pandiyanகோவை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை அருகே சின்னியம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கு மத்திய அரசு தான் காரணம். வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி இவை நடத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர்களுக்கு இல்லை. முதல்வர் பொறுப்பு என்பது மலர் கீரிடம் அல்ல அவை முட்கீரிடம் ஆகும். தமிழக சட்டப் பேரவையில் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பில் நீட்டிக்க முடியும்.

சட்டசபையில் உறுப்பினர்கள் தங்களது உடல் வலிமையின் பலத்தை காட்டக்கூடாது. தங்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட வாக்குரிமையை மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு என்று இல்லாமல் எப்படி வாக்கெடுப்பு நடத்தி இருந்தாலும் அந்தந்த கட்சிக்கு உள்ள பலம் தான் நிரூபிக்கப்பட்டு இருக்கும். எதிர்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என்பதை ஏற்க முடியாது என்றார்.

tamil.oneindia.com

TAGS: