வேண்டாம்… வேண்டாம்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம்.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

studentsபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை எதிர்த்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் இயற்கை சூழல் கெட்டு பாலைவனமாக மாறிவிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டை மீண்டும் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் போராடியது போல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கர்நாடக நிறுவனம்

நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது எந்த நிறுவனத்திற்கு என்று தெரியுமா? ஏற்கனவே காவிரியில் இருந்து தண்ணீர் தராமல் தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சி மேற்கொண்டு வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்குத்தான் இயற்கை எரிவாயுவை தமிழ்நாட்டில் இருந்து எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதுவும் 15 ஆண்டுகளுக்கு கொடுத்துள்ளது.

வேறு பெயரில் மீத்தேன் திட்டம்

ஏற்கனவே, தஞ்சை பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பை அடுத்து மீத்தேன் திட்டத்தில் இருந்து அரசு பின்வாங்கியது. அந்தத் திட்டம் தான் தற்போது ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் வந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது என்ற தகவல் வெளியானது முதல் நெடுவாசல் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆர்பாட்டம், போராட்டம், கையெழுத்து இயக்கம், மாவட்ட ஆட்சியரிடம் மனு என்று தினம் தினம் ஒவ்வொரு வகையான போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர்.

விரட்டி அடிப்பு

தொடர் போராட்டங்களை பொருட்படுத்தாமல் நேற்று ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுக்க குத்தகைக்கு வாங்கியுள்ள இடத்தை ஆய்வு செய்ய வருவாய் துறை அலுவலர்கள் சென்றுள்ளனர். அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

கைது

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ம் தேதி புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு 5 பேர் காவல்நிலையம் சென்றுள்ளனர். அவர்கள் 5 பேர் மீது பழைய வழக்குகள் இருப்பதாகக் கூறி போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டம்

இந்நிலையில், நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுத்து விவசாயத்தை அழிக்க விடமாட்டோம் என்று கோரி புதுக்கோட்டை மன்னர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கேட்டவர்கள் மீது வழக்கு போட்டதை திரும்ப பெறக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அடுத்த நடவடிக்கை என்ன?

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவது மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று நடைபெற உள்ளது. இதில் இயற்கை எரிவாயு என்ற பெயரில் தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதற்கான திட்டம் வகுக்கப்பட உள்ளது.

tamil.oneindia.com

TAGS: