பிரதமர் ‘மரியாதைக்குறைவாக’ நடந்து கொண்டிருக்கும் வட கொரிய தூதரைச் சாடினார்

najibகிம்   ஜோங்- நாம்   கொலை    தொடர்பில்    அரசதந்திர  பதற்றம்    மிகுந்துவரும்   வேளையில்,    வட  கொரிய   தூதர்   காங்   சோல்   தெரிவித்த    கருத்து   மரியாதைக்குறைவானது   எனப்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்     சாடியுள்ளார்.

“தூதர்  தேவையில்லாமல்    பேசி  இருக்கிறார்.   அரசதந்திர    ரீதியில் அது  மரியாதைக்குறைவான    கருத்து.    ஆனால்,  மலேசியா   அதன்   நிலைப்பாட்டில்   உறுதியாக   இருக்கிறது”,  என்று  பிரதமர்  கூறியதாக   ராய்ட்டர்ஸ்    தெரிவித்தது.

ஆஸ்ட்ரோ  அவானி   செய்தியறிக்கை,  மற்ற   நாடுகள்  தன்னைப்  பணயமாக   வைத்தாடுவதற்கு   மலேசியா    இடமளிக்காது   என்பதை   நஜிப்   வலியுறுத்தினார்   எனக்  கூறிற்று.

மலேசியா     இறையாண்மை  கொண்ட    நாடு.  அதற்கென  தனி   அரசமைப்பைப்  பெற்றுள்ளது.

“கிம்  ஜோங்-நாம்   கொலை   தொடர்பில்   முடிவெடுக்க   யாரும்   எங்களுக்கு  நெருக்குதல்  கொடுக்க   முடியாது”,  என்றாரவர்.

நேற்று,  கோலாலும்பூரில்    நடந்த    செய்தியாளர்   கூட்டமொன்றில்   பேசிய    காங்   சோல்,  மலேசிய    அதிகாரிகளின்   புலன்  விசாரணையில்    நம்பிக்கை   இல்லை   என்றும்   அவ்விவகாரத்தில்   மற்றவர்களின்  மறைமுகமான   தலையீடு   இருப்பதாக    ஐயங்  கொள்வதாகவும்   குறிப்பிட்டார்.

கோலாலும்பூரில்   வட  கொரியர்   ஒருவரின்   கொண்டோமினியத்தில்   அதிரடிச்   சோதனை    மேற்கொண்ட    போலீசார்   மனித  உரிமைகளை   மீறி   நடந்து   கொண்டனர்   என்றும்   அவர்   குற்றம்  சுமத்தினார்.

அக்குடும்பத்தாரைத்  துப்பாக்கியைக்   காண்பித்து   மிரட்டினார்கள்   என்றும்   மகனைத்   தாக்கினார்கள்    என்றும்   காங்  சோல்   கூறினார்.