பாலச்சந்திரன் துவாரகா கொலைகளோடு மறைக்கப்பட்ட ஆதாரங்கள் எங்கே? போலி முகம் மாறுமா?

dwarakaமூன்று தசாப்த கால யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கை இராணுவம் போர்க்குற்றம் புரிந்தது என்பது இன்றுவரை சர்வதேசம் இலங்கைக்கு கொடுத்து வரும் பாரிய அழுத்தம்.

தற்போதைய சூழலில் குறித்த குற்றச்சாட்டுக்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றது. அந்த வகையில் இராணுவத்தின் வதை முகாம்கள், மற்றும் இலங்கை இராணுவம் பெண்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்தமைக்கான ஆதாரப்புகைப்படங்களும் இப்போது வெளிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவம் பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தியதாக கூறி ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்காவின் ஜோன்னஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டு இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.

இவ்வாறான ஆதார வெளியீடுகள் யுத்தம் நிறைவடைந்த காலம் தொடக்கம் முதலாகவே வெளிப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றது என்பது பின்னோக்கிய இலங்கைப் பாதையை திரும்பிப் பார்க்கும் போது தெளிவாகும்.

அண்மையில் இறுதி யுத்தத்தின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக கூறி பல ஆதாரங்கள் வெளிவந்தன. என்ற போதும் அதற்கு பதில் கிடைக்கப்பெற வில்லை.

இவ்வாறாக ஆதாரங்களும் கூட மண்ணோடு புதைக்கப்பட்ட மரணங்களாக மூடி மறைக்கப்பட்டு விட்டது என்பதே இலங்கையின் நிலை. அப்போது வெளிவந்த ஆதாரங்கள் எங்கே?

யுத்த நிலவரம் இன்று வரை வெளிப்படுத்தப்படாமலேயே மர்மமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளதும் அரசியல் இலாபத்திற்காகவே. இதன் மூலமாக அரசுகளின் போலி முகங்கள் அம்பலமாகுவதாக கூறப்படுகின்றது.

அதே போன்று ஐக்கிய நாடுகள் சபை சார்பில் இலங்கை வந்து சென்ற பான்கீன் மூனும் இலங்கை அவலங்களை ஐ. நா வேடிக்கை பார்த்தது என்பதை ஒப்புக் கொண்டே சென்றார்.

ஆனால் தீர்வு மட்டும் இழுபறி நிலையே. இவை இவ்வாறு இருக்கும் நிலையிலே மீண்டும் தற்போது போர்க்குற்றம் தொடர்பில் புகைவிட ஆரம்பித்துள்ளது.

எத்தனை ஆதாரங்கள் வெளி வந்த போதும் இலங்கை அரசினைத் தாண்டி எதுவும் நடக்காது என்பதும் ஒரு வகையில் தெளிவு.

அதனையே “எதிரி எப்போதும் எதிரியல்ல, நண்பன் எப்போதும் நண்பன் அல்ல. கடந்த கால கசப்புகளை மறந்து மன்னிப்போம்” என அண்மையில் ஜனாதிபதி மறைமுகமாக தெரிவித்தார் என அரசியல் நோக்குனர்கள் கூறுகின்றனர்.

இப்போது கிடைக்கும் ஆதாரங்களை விடவும் கடந்த காலங்களில் அதிக ஆதாரங்கள் வெளிவந்தன. பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரன் கொலை, மகள் துவாரகா கொலை முதல் சரணடைந்தவர்களை கொன்றது, பாதுகாப்பு வலயத்தை தாக்கியது என பல குற்றச்சாட்டுகள் அப்போது பரவலாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆதாரங்கள் எங்கே?

இப்போது மீண்டும் இலங்கை இராணுவத்தரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை புரிந்தது என்று புகைப்பட ஆதாரங்கள் வெளிவருகின்றன ஆனால் நீதி கிடைக்குமா? கொடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

அதேபோல யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த முக்கிய புள்ளியான அப்போதைய இராணுவத் தளபதியும் கூட தமது இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்பதை பகிரங்கமாக தெரிவித்தார்.

ஆனாலும் எந்தப் பயனும் இல்லை. வெள்ளைக் கொடி விவகாரத்திற்கும் கூட அதே நிலைதான். இவ்வாறான சூழலிலேயே தற்போது போர்க் குற்றம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு விட்டது இனி போர்க் குற்றம் தொடர்பில் நீதியை வேண்டுவது இலங்கை அரசைத் தாண்டி நடை பெறாத ஒன்றே.

இருந்தபோதும் போர்க்குற்றங்கள் சூடு பிடிக்குமானால் அது அரசுக்கு எதிராக திசை திரும்பி பாரிய புரட்சியாகவும் வெடிக்கக்கூடும் அதனை நன்றாக அறிந்து கொண்டே அரசு கண்ணாம்பூச்சி ஆடி வருகின்றது.

சர்வதேசத்திடம் ஒரு முகம், இலங்கை தமிழ் மக்களிடம் ஒரு முகம், இராணுவத்திடம் ஒரு முகம் என்று பல்வேறு முகங்களை இலங்கையில் ஆட்சியாளர்கள் நன்றாகவே கடைப்பிடித்து வருகின்றார்கள் என்பது தென்னிலங்கை அரசியல் புத்தி ஜீவிகளின் கருத்து.

அவை அனைத்தையும் ஒரு புறம் தள்ளி விட்டு அரசு இப்போது தமிழ் மக்களின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கர வாதத் தடைச்சட்டம் நீக்கம், காணாமல் போனோருக்கான நீதி, அடிப்படை உரிமைகள் இவற்றை தீர்த்து வைக்க அரசு முன்வரவேண்டும்.

அதனை விடுத்துவிட்டு சர்வதேசத்தின் பார்வையை திசை திருப்பும் ஓர் செயல்களையே இப்போதைய அரசு கடைப் பிடித்து கொண்டு வருகின்றது.

இவை அனைத்தையும் தாண்டி நல்லிணக்க நாடாக இலங்கை மாற்றம் அடைய வேண்டும் என்றால் கடந்த அரசுகள் விட்ட பிழைகளை இப்போதைய அரசு திருத்திக் கொள்ள வேண்டும் அதன் மூலமாகவே தீர்வுகளும் ஒற்றுமையும் நாட்டில் மலரும்.

இலங்கை அரசு எப்படியும் போர்க் குற்றத்தை ஒப்பு கொள்ளாது. மழுப்பும் நடவடிக்கையை கையாண்டு கொண்டே காலப்பயணத்தில் மறக்கடிக்க வைக்கும் திசை திருப்பும் செயலிலேயே இப்போது ஈடுபட்டு வருகின்றது.

அவற்றை ஒருபுறம் ஒதுக்கி விட்டு இப்போதைய தீர்வை நேர்மையாக கொடுக்க முன்வராவிட்டால் கடந்த காலத்தை நோக்கியே இலங்கை பயணிக்கும் என்பது அரசியல் அவதானிகளின் கூற்று.

-http://www.tamilwin.com

TAGS: