கடவுளின் படைப்பில் திருநங்கை! மனிதனின் பார்வையில் பாலியல் தொழிலாளிகள்

“திருநங்கைகள்” கடவுளின் படைப்பில் மூன்றாம் பாலினம், மனிதர்களின் பார்வையில் பாலியல் தொழிலாளிகள்.

கண்ணை பறிக்கும் நிறங்களில் ஆடைகள், பளிச்சென்று காட்டும் உதட்டு சாயம், மஸ்காரா விழிகள், சில்லறைகள் சிதறியது போன்ற சிரிப்பு இவையே திருநங்கைகளின் அடையாளமாக இந்த சமுதாயத்தில் பார்க்கப்படுகிறது.

இந்த உலகில் ஆண் பெண் எனும் இரண்டு பாலினத்தை இறைவன் படைத்தாலும், மூன்றாம் பாலினமான திருநங்கைகள் உருவாவதவதற்கு உடலில் ஏற்படும் அறிவியல் ரீதியான ஹார்மோன் மாற்றமே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், இதுவும் கடவுளின் படைப்புதான், எங்களையும் இந்த சமூகத்தில் மனிதர்களை போன்று வாழவிடுங்கள் என குரல் எழுப்புகின்றனர் திருநங்கைகள்.

ஒரு சில நாடுகளில் ஓரினச்சேர்கையாளர்கள் மற்றும் லெஸிபியன்களுக்கு கூட அங்கீகாரம் கொடுக்கப்பட்டுவிட்டது, ஆனால் மூன்றாம் பாலினமான திருநங்கைகளுக்கு இந்த சமூகத்தில் போதிய உரிமைகள் இன்றுவரை கிடைக்கவில்லை.

இந்த சமுதாயத்தில் இவர்கள் மீது பாலியல் தொழிலாளிகள் என்ற போர்வை மட்டுமே போர்த்தப்படுகிறது…தொடர்ந்தும் போர்த்தப்பட்டுவருகிறது. அதிலிருந்து இவர்கள் மீண்டு வர நினைத்தால் கூட இந்த சமுதாயம் இதற்கு ஒருபோதும் இடம் தராது என்பதற்கு திருநங்கைகளின் வாழ்க்கை முறைகளே சான்று.

இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் திருநங்கைகள் அதிகமாக வசிக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் இவர்கள், தங்களுக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கி, ஒரு சமுதாயமாக வாழ்கின்றனர்.

அப்படி, இவர்களின் வாழ்க்கை முறை மற்றும் இவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து புகைப்படக்கலைஞர்கள் Jan Moeller Hansen இவர்களுடன் 2 ஆண்டுகள் தங்கியிருந்து, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் கலாசாரம் குறித்து விளக்கியுள்ளார்.

வங்கதேசம் டக்காவில் திருநங்கைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாக ஒரு குடும்பம் போன்று வசித்து வருகின்றனர்.

இந்த திருநங்கைகள் தங்களுடைய வாழ்க்கையை பெருமையாகவும், கண்ணியத்தோடும் வாழ்ந்து வருகின்றனர்.

சமுதாயத்தில் இவர்களுக்கு மதிப்பில்லாத காரணத்தால், இங்கு வசிப்பவர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு உறவினை ஏற்படுத்திக்கொண்டு ஒரு குடும்பபோன்று வசித்து வருகின்றனர்.

பிரித்துக்கொள்ள முடியாத பந்தத்தை உருவாக்கி கொள்ளும் இவர்கள், அதனையே தங்கள் அடையாளமாகவும் கருதுகின்றனர்.

கடந்த ஆண்டுகளாக இவர்கள், தங்களின் தனியுரிமைக்காக போராடி வருகின்றனர். நாங்களும் மனிதர்கள் தான் என எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.

இந்த சமுதாயத்தில் மனிதர்களை மதிப்பது போன்று எங்களையும் மதிக்க வேண்டும், எங்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் இந்த சமுதாயத்தில் இருந்து நாங்கள் ஒருபோதும் வேறுபடுத்தப்படமாட்டோம் என்பதே இவர்களது நம்பிக்கை.

-http://news.lankasri.com