பாலகுமாரன் உள்ளிட்டவர்கள் படையினரின் கட்டுப்பாட்டில் – கொலை செய்தவர்கள் சிங்களவர்கள்..!

Balakumaran

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 7 ஆண்டுகளை கடந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் தமது சொந்த நிலத்தில் குடியேறுவதற்கு போராடிக்கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் இன்றைய தினம் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் நீதி ஒரு தரப்பினருக்கு ஒரு வகையிலும், மற்றும் ஒரு தரப்பினருக்கு வேறொரு வகையிலும் இருக்கின்றது. இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

காணி விடுவிப்பை வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நேற்று முன்தினம் அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

எனினும், நாட்கள் இரண்டு கடந்துள்ள போதிலும், அமைச்சரையும் காணவில்லை, அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்.

ஆயுதப் போராட்டத்தின் போது விடுதலைப் புலிகள் காணிகளை கையகப்படுத்தி வைத்திருந்தனர் என தெரிவித்தும், அதனை காரணம் காட்டி அரச படையினர் காணிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு படையினர் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் போராட்டத்தை அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை.

இறுதி யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் படையினரிடம் சரணடைந்தார்கள். அவர்கள் அரச பேருந்துகளில் ஏற்றி செல்லப்பட்டார்கள. அதனை கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்கள் இருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்ட போராளிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தமைக்கான புகைப்பட்டம் “லங்கா கார்டியன்” ஊடகத்தில் வெளிவந்திருந்தது.

காணாமல் போனவர்கள் குறித்து சர்வதேச ரீதியில் பல்வேறு தரப்பினரும் தகவல்களை வெளியிட்டு வருகின்ற நிலையில், அவை ஏன் மறைக்கப்படுகின்றன என அவர் பாராளுமன்றில் கேள்வியெழுப்பியிருந்தார்.

நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், தமிழர்களை கொன்று குவித்தது சிங்களவர்கள். ஆனாலும் நீதிக்காக போராடிக்கொண்டிருப்பவர்களாக இன்று தமிழர்கள் இருக்கின்றனர்.

காணாமல் போனவர்கள் குறித்த பரணகம அறிக்கை, ஜனாதிபதி விசாரணை அறிக்கை என்பவற்றுக்கு என்ன நடந்தது..? அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதன் போது பாராளுமன்றில் சற்று சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து குறிக்கிட்டு பேசிய நீதியமைச்சர் விஜேதாச, யுத்தம் காரணமாக நாடு முழுவதும் பல பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. அனைத்து பக்கங்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.

பேருந்துகளின் குண்டுகள் வைக்கப்பட்டன. சிங்கள் மக்களும் கொல்லப்பட்டனர். ஆக்காங்கே மரணங்கள் சம்பவித்தன. ஒரு தரப்பினருக்கு மட்டும் பாதிப்பு ஏற்படவில்லை.

அத்துடன், நீதி தேவை என இப்போது தான் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். நடந்ததை தட்டிக்க வேண்டும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை என நீதியமைச்சர் கூறியிருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்,

எங்கெல்லாம் குண்டுகள் வெடித்ததோ, அநீதி இடம்பெற்றதோ அவை அனைத்திற்கும் நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

நடந்தது நடந்துவிட்டது என்று சொல்லப்படுகின்றதே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. கொலை செய்தவர்களே விசாரணை செய்து, நீதி வழங்குவது என்பது எந்த விதத்தில் நியாயம்..?

யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேசம் தலையிடுகின்ற போதிலும், அதனை வேண்டாம் என அரசாங்கம் அழுத்தம் கொடுகின்றது.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

https://youtu.be/BRXeJkiw35Y

TAGS: