ஈராக்கில் ஒரே நாளில் 200 அப்பாவி மக்கள் பலி: ஐ.நா சபை அதிர்ச்சி தகவல்

isis-india2ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலின்போது ஒரே நாளில் 200 அப்பாவி மக்கள் பலியாகியிருப்பதாக ஐ.நா சபை அச்சம் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள மோசூல் நகர் தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நகரைச் சுற்றி சுமார் 2,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மோசூல் நகரை மீட்க அமெரிக்காவின் கூட்டுப்படையானது கடந்த சில மாதங்களாக போரிட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று ஐ.எஸ் தீவிரவாதிகளின் தளவாடங்கள் மீது அமெரிக்கா மற்றும் ஈராக் கூட்டுப்படையினர் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மேலும், இத்தாக்குதலுக்கு பின்னர் சம்பவ இடத்தில் இருந்து அப்பாவி மக்களின் 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஈராக்கில் உள்ள ஐ.நா சபை அதிகாரி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அமெரிக்கா மற்றும் ஈராக் நடத்திய தாக்குதலில் 200 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இத்தகவல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மோசூல் நகரை மீட்கும் நோக்கில் நடைபெற்று வரும் யுத்தத்தில் இருந்து உயிர் பிழைக்க இதுவரை சுமார் 1,80,000 பேர் ஈராக்கை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com