‘ரஜினி போனால் என்ன? மோடி போனால் என்ன? ஒரு பயனும் இல்லை!’ தமிழனுக்கு ஒரு பயனும் கிடையாது : சீமான்

seeman344‘ரஜினி இலங்கைக்கு வருவது சிறப்பான விஷயம்’, ‘ரஜினி, யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும்’ என்று எதிரும் புதிருமான அறிக்கை அரசியலில் சூடு கிளப்பி வந்த நிலையில், ‘விழாவுக்கு நான் செல்லவில்லை’ என்று தன்னிலை விளக்கம் அறிவித்து சூட்டைத் தணித்திருக்கிறார் ரஜினி.

இது குறித்து ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்துக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இனப்படுகொலை குறித்த விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப்போடுவதாக செய்திகள் வந்த அடுத்த நாளே ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருக்கிறார் என்ற செய்தியும் வருகிறது.

ஆனாலும் நான் உடனடியாக விசாரித்தேன். ரஜினி அப்படி எந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை என்பது உறுதியானது. அதனால்தான் அதுபற்றி மேற்கொண்டு நான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.

“தமிழகத் தலைவர்களின் ஆவேசப் பேச்சுகள் எங்களுக்குப் பாதகத்தைத்தான் ஏற்படுத்துகிறது என்பதுபோன்ற பேச்சு இலங்கைத் தமிழ் தலைவர்கள் மத்தியில் ஒலிக்கிறதே…?’”

என்னைப் பொருத்தவரை நம் நாட்டின் பிரதமர் மோடியே இலங்கைக்கு சென்று வந்துவிட்டார். அதன்பிறகும் கூட நம் தமிழினத்துக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. நாம் இங்கிருந்து கத்திக் கொண்டு இருப்பதால்தான் ஏதோ கொஞ்ச நஞ்ச உதவிகளும் அங்கே ஈழத்தமிழர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

சிங்களரே தமிழர்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புவதைவிட பைத்தியக்காரத்தனம் எதுவும் இல்லை. ‘சர்வதேச அளவில் பிரச்சினைகள் வரும்’ என்று சொல்லி இந்திய நாடு அழுத்தம் கொடுத்தால்தான் இலங்கை அரசாங்கம் பெயரளவுக்காவது நல்லது செய்யும். எனவே, இந்திய நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்தான் நாங்கள் இங்கிருந்து நம் இனத்துக்காக கத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படி ஈழத்துக்காகப் போராட்டங்கள் நடத்தி சிறைசென்று துன்பப்பட்ட போதெல்லாம், ஏன் இப்படி எங்களுக்காக போராடி சிரமப்படுகிறீர்கள்? என்று யாரும் சொல்லவில்லையே…? இப்போதும்கூட இங்கே, ‘சீமானா…. அவர் எப்போதும் ஈழத்தையேதான் பேசுவார்’ என்று தானே சொல்கிறார்கள். இதுதானே எதார்த்தம். ஆக, ஈழத்துக்காகப் போராடுவதும், உரிமை பேசுவதும் எங்களுக்கு தமிழக அரசியலில் பின்னடைவாகத்தானே இருக்கிறது?”

”ஈழ ஆதரவு பேசும் தலைவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே…?”

இவ்வளவு பெரிய வல்லரசு நாடு, உளவுத்துறை வைத்திருக்கிறது. அப்படி எங்களுக்கு கோடி கோடியாய் காசு வருகிறது என்றால், கண்டுபிடிக்காமல் வைத்திருக்குமா? அரசுக்கு எதிராக நாங்கள் இயங்குவதாகச் சொல்கிறவர்கள், எங்களுக்கு எங்கெங்கு இருந்து பணம் வருகிறது என்பதையெல்லாம் எங்கள் வீடுகளுக்குள் புகுந்து சோதனை நடத்தாமலா இருக்கும்?

ஆக, தமிழ் தேசிய இன மக்களின் உணர்வை ஊனப்படுத்தும் திட்டமிட்டப் இழிவான ஈன அரசியல் இது. தேசிய திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் திட்டமிட்டு பேசுகிற முடிவு இது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானமே நம் தம்பிகள் கொடுத்த அழுத்தத்தை சமாளிக்கவும் அதனை வாக்கு வங்கியாக மாற்றவுமானத் திட்டம்தானே….? அதன்பிறகு அந்தத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எந்த நகர்வையுமே அவர்கள் எடுக்கவில்லையே….?

”இப்போது உள்ள சூழ்நிலையில், இலங்கை அரசுக்கு அணுக்கமாக இருந்து ஈழத்தமிழர்களுக்கு நல்லது நடக்க முயற்சிப்பதுதானே சரியான வழியாகும்?”

சிங்களவர்களோடு சமரசம், சமாதானம் பேசி சகோதரத்துவத்தோடும் நட்போடும் எதையும் பெற முடியாது என்பதுதான் 60 ஆண்டுகால வரலாறு. எனக்கு என்ன இழப்பு – வலி ஏற்பட்டுள்ளதோ இதே இழப்பும் – வலியும் என்றைக்கு சிங்களவனுக்கு ஏற்படுகிறதோ அன்றைக்குத்தான், நம்மோடு அவன் சமரசம் பேச முற்படுவான்.

அதுவரையிலும் இதைப்பற்றிப் பேசிப் பயனில்லை. இதற்கிடையில், அங்கே ரஜினி போனால் என்ன, மோடி போனால் என்ன… யார் போயும் ஒரு பயனும் கிடையாது. என்று சீமான் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

– Vikatan

TAGS: