குலா: ஒருதலைப்பட்சமான மத மாற்றம் மசோதா குப்பைத் தொட்டிக்கா?

 

kulaசட்டச் சீர்திருத்தம் (திருமணம் மற்றும் மணவிலக்கு) சட்டம் 1976 க்கு திருத்தங்கள் செய்வதற்கான திட்டம் குப்பையில் போடப்படலாம் என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கவலை தெரிவித்துள்ளார்.

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன. ஆனால், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சாத்தியம் தென்படவில்லை என்றாரவர்.

“என்ன நேர்ந்தாலும் சரி, இந்த மசோதாவை என்ன விலை கொடுத்தாவது திரும்பப் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திவாய்ந்தவகள் இருப்பதை நான் அறிவேன்.

“கடந்த இரண்டு வாரங்களாக நாடாளுமன்ற நடவடிக்கை பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்த மசோதா இந்த வாரம் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

“இப்போது, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் மூன்றாரவது வாரத்தில் அந்த மசோதா எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

“இது இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது”, என்று குலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.

இந்தத் திருத்தங்கள் அடங்கிய மசோதா கடந்த ஆண்டு நவம்பர் 21 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட திருத்தம், ஒரு குழந்தை அதன் பெற்றோர்கள் சிவில் சட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொண்ட போது எந்த மதத்தில் இருந்தனரோ அதே மதத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக்குகிறது.

இதன்படி, பெற்றோர்களில் ஒருவர் மதம் மாறினாலும், குழந்தையின் மதத்தை மாற்ற முடியாது. இதற்கு இரு பெற்றோர்களின் சம்மதமும் இருக்க வேண்டும்.

இந்தத் திருத்தத்தின் நோக்கம் சிவில் சட்டத்தின்கீழ் திருமணம் புரிந்துகொண்ட தம்பதியில் ஒருவர் இஸ்லாத்திற்கு மதம் மாறி, குழந்தையும் இரகசியமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்றி ஷரியா நீதிமன்றத்தின் வழி குழந்தையை தன் பாதுகாப்பில் எடுத்துக்கொள்ளும் பிரச்சனையைக் கையாள்வதாகும்.

“இந்த மசோதாவை தாமதப்படுத்துதல் அல்லது திரும்பப் பெறுதல் குறித்து ஏராளமான மலேசியர்கள் மற்றும் அதே சிந்தனையுடையவர்கள் ஏமாற்றமடைவார்கள். நான் பிரதமர் அவருடைய வாக்குறுதியை நிலைநிறுத்த வேண்டுமென்றும் தீவிரவாதிகளுக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் அவரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

“எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தாமதமாகி விட்ட இந்த மசோதாவுக்கு இனியும் அங்கீகாரமளிப்பதில் ஏற்படும் எந்த ஒரு தாமதமும் பலரைத் தொடர்ந்து பேச்சுமூச்சற்ற துன்பத்திற்கு ஆளாக்கும்”, என்று குலா மேலும் கூறினார்.