தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் படும் அவலம்! வெளிவராத பல உண்மைகள் அம்பலம்

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது-

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு அண்மையில் தாக்கல்செய்த பட்ஜெட்டில், இலங்கை தமிழ் அகதிகளுக்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை எத்தனை பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், அகதிகள் மறுவாழ்வு பதிவேடோ, சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கி இருப்பதாகவும், முகாம்களுக்கு வெளியே சுமார் 40 ஆயிரம் பேர் உள்ளதாகவும் தெரிவிக்கிறது.

ஒரு லட்சத்தை நெருங்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி போதுமானதா? அவர்களின் வாழ்வாதாரம் எப்படி உள்ளது?

மத்திய – மாநில அரசுகளின் உதவிகள் குறித்து முகாம்களில் வசிக்கும் அந்த மக்கள் என்ன சொல்கிறார்கள்? என்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமுக்கு நேரில் சென்று விசாரித்தோம்.

முகாம்களில் இருந்தவர்களிடம் பேசிய போது ஒருவர்கூட வெளிப்படையாகப் பேசுவதற்கு முன்வரவில்லை.

அதற்கு அவர்கள் சொன்ன பதில், “நாங்கள் க்யூ பிராஞ்ச் போலீஸார் கட்டுப்பாட்டில் இருப்பதால் எங்களால் எதையும் வெளிப்படையாகப் பேச இயலாது. எனவே, அவர்களுடைய அனுமதியைப் பெற்றுக்கொண்டு எங்களிடம் வாருங்கள் என்பதுதான்.

விவசாயிகளையே விட்டு விட்டார்கள் எங்களுடைய நலனுக்காகத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இங்குள்ள குறைகளைச் சொன்னால் ‘அகதிகளுக்கான பதிவை’ பதிவேட்டில் இருந்து எடுத்து விடுவார்கள் என்றனர்.

முகாமில் தங்கியிருக்கும் மக்களிடம் பேச க்யூ பிரிவு போலீசார் அனுமதிக்க மாட்டர்கள் என்று தெரிந்தும் அந்த அலுவலகத்திற்கு போய் அனுமதி கோரிய போது, சம்பந்தப்பட்ட போலீஸார் வெளியில் சென்றிருந்தது தெரிய வந்தது.

பின்னர் அங்கிருந்த ரமேஷ் என்பவரிடம் முகாமின் நிலை குறித்து கேட்டோம். அவர் சொன்ன வார்த்தை, மத்திய-மாநில அரசுகளுக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக இருந்தது.

நாட்டுக்கே சோறு போடும் விவசாயிகள், பட்டினியோடு தலைநகர் டெல்லியில் அரை நிர்வாணமாகப் போராடுகிறார்கள். அவர்களையே கண்டுகொள்ளாத மத்திய அரசு, அகதிகளான எங்களையா ஏறெடுத்துப் பார்க்கப் போகிறது? என்றார் அவர்.

 

 

தொடர்ந்து நீண்ட மௌனத்திற்குப் பிறகு ரமேஷ் பேசினார். என்னுடைய புகைப்படத்தை பிரசுரிக்க வேண்டாம். அப்படி, புகைப்படத்துடன் எழுதினால், அகதிகளுக்கான பதிவேட்டில் இருந்து என் பெயரை நீக்கி விடுவார்கள்.

தற்போது, கிடைத்து வரும் ஒருவேளை, அரை வேளை உணவும் கிடைக்காமல் போய்விடும். இந்த முகாமில் 936 குடும்பங்களைச் சேர்ந்த 3,800 பேர் உள்ளோம்.

நபர் ஒருவருக்கு அரசு தருகிற 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலான பணத்தை வைத்துக் கொண்டு, அகதிகளால் என்ன செய்ய முடியும்.

கடந்த 26 ஆண்டுகளாக 3 வேளை சாப்பாட்டுக்கான போராட்டமாகத்தான் எங்களுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது என்று சோகத்துடன் தெரிவித்தார்.

கல்லூரியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அகதிகள் முகாம் அகதிகளுக்காக மத்திய-மாநில அரசுகளின் உதவித்தொகை போதவில்லை என்பதால், இங்குள்ள மக்கள் அருகாமையில் உள்ள நிறுவனங்களுக்கு தினக்கூலி வேலைக்குச் செல்கின்றனர்.

பெயிண்டிங், லோடு இறக்குதல், பெண்களாக இருந்தால் வீட்டுவேலை என மாறிமாறி கிடைக்கின்ற வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி வருகிறோம்.

இதில் எல்லா நாட்களும் வேலை கிடைப்பதில்லை. சாப்பாட்டுக்கும், உடைகளுக்குமே அல்லாடிக் கொண்டிருக்கிறோம். இதில் பிள்ளைகளை எப்படி படிக்க வைக்கமுடியும்?

அப்படியே படிக்க வைத்தாலும் இங்கே எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. 12-வது படிப்பதற்கு பஜார் பக்கம் உள்ள பள்ளிக்குப் போக வேண்டும். இவ்வளவு சிரமங்களைத் தாண்டி பிள்ளைகளை படிக்க வைக்க முடியல.

அப்படியே பள்ளிப்படிப்பை முடித்தாலும், கல்லூரிப் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது.அகதிகளுடைய பிள்ளைகள் அரசுக் கல்லூரியில் சேர முடியாது.

என் மகன் இந்த வருடத்துடன் 12-ம் வகுப்பை முடிக்கப் போகிறான். அவனை கல்லூரியில் சேர்க்க வேண்டும். அரசு கல்லூரி எனில், கட்டணம் குறைவாக இருக்கும். எனவே, எப்படியாவது கடன் வாங்கியாவது சேர்த்து விடுவேன்.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளில் எப்படி எங்களால் சேர்த்து பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும்? 12-ம் வகுப்பு வரை படிக்க வைப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்டேன்.

 

 

இந்தப் பிரச்சினை எங்க குடும்பத்துக்கு மட்டுமில்ல. இங்குள்ள எல்லாருடைய குடும்பத்திற்கும் இதே நிலைதான். பிள்ளைகளை படிக்க வைக்க முடியாம அனைவருமே திண்டாடுறாங்க.

அரசு நினைத்தால் எங்களுக்கும் குடியுரிமை வழங்கி, எங்கள் வாழ்வையும் முன்னேற்ற வழிவகை செய்ய முடியும்” என்றார் அவர்.இதைத் தெரிவிக்கும் போது கண்கலங்கியவர் மீண்டும் தொடர்ந்தார்.

குடியுரிமை இல்லாத காரணத்தால்தானே பிள்ளையைப் படிக்க வைக்க முடியவில்லை என்ற யோசனை வரும். சொந்த நாட்டுக்கே திரும்பிடலாம்னு யோசிச்சா, கடந்த 26 வருடங்களாக கல்லு கட்டிடம் மாதிரி வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வருகிறோம்.

திரும்பவும் எங்கள் நாட்டுக்குப் போனா, அங்கே வாழறதுக்கு ஆரம்பத்தில் இருந்தே வழிதேடணுமே? என்ற பயம் எங்களைத் தொற்றிக் கொள்ளும். இந்த கேள்விகளோடு தான் ஒவ்வொரு நாளும் ஓடிகிட்டு இருக்கு என்றார் ரமேஷ்.

மருத்துவமனை இல்லாத அவலம்!

இதனைத்தொடர்ந்து முகாமின் அடுத்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே சைக்கிளில் வந்தவரை மறித்துப் பேசினோம்.

என்னுடைய பெயர் கிருபாகரன் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்கினார். அரசு கொடுக்கிற நிதியுதவியை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? நல்ல பள்ளிக்கூடம் இல்லை. மருத்துவமனை இல்லை. யாருக்காவது உடல்நிலை சரியில்லைன்னா கவரப்பேட்டைக்குத்தான் போகணும்.

இந்தப் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், இங்குள்ள மக்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது.

பலமுறை இதுதொடர்பாக, தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டோம். ஆனாலும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

நிலம், வீடு உள்ளிட்ட வசதிகளோடு வாழ்ந்து விட்டு இங்கே பிச்சைக்காரர்களை விட மோசமான வாழ்கையைத்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சில நேரத்தில்,சொந்த நாட்டிற்கு போய் விடலாம்னு தோணும். அங்கே போனாலும் தங்குவதற்கு வீடு வேண்டும். புதிய தொழில் தொடங்க பணம் வேண்டும். அதனால் இங்கேயே அகதிகளாகவே காலத்தை ஓட்டி விடலாம் என்று மனசை தேற்றிக்குவேன் என்றார்.

பல்வேறு இடங்களில் சுவர் இடிந்தும், கம்பிகள் தொங்கிக்கொண்டும் காணப்படும் முகாம் வீடுகள், அந்த மக்களின் வறுமையை மௌனமாக சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒவ்வொருவர் வீட்டிலும் வளர்க்கப்பட்டுள்ள செடிகளும், மரங்களும் சிரித்துக் கொண்டிருந்தன.

சீருடை வாங்க காசில்லை!

முகாமில் வளர்ந்துள்ள மரங்கள்தான் இங்குள்ள மக்களின் கவலையைப் போக்குகிறதோ என்று எண்ணிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கையில், ஒரு சிறுமி எதிர்ப்பட்டாள். அவளிடம் பேசினோம்.

என் பெயர் குட்டி. நான் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். இவ்ளோ படித்ததே பெரிய விஷயம். என் அம்மா தெய்வானை. எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று பெண் பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள்.

அப்பா சரியாக காசு கொடுக்க மாட்டார். வாரத்திற்கு 300 ரூபாய் தருவார். அரசின் உதவித்தொகை வருகிறது. ஒரு சிறிய குளிர்பானக் கடை நடத்தி வருகிறோம். அதில் கிடைக்கும் 50 ரூபாய், 100 ரூபாய் வருமானத்தைக் கொண்டுதான் எங்கள் குடும்பம் கழிகிறது என்றாள்.

 

 

புத்தகத்தைச் சுமக்க வேண்டிய வயதில் குடும்ப பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் சிறுமியை நினைத்துப் பாராட்டுவதா, வேதனைப்படுவதா என்றே தெரியவில்லை.

சில நேரங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டம்தான். என் தம்பிகள், தங்கைகள் நன்றாகப் படிக்க வேண்டும். அவர்கள் படித்து வேலைக்குப் போனால் குடும்ப கஷ்டம் குறைந்து விடும். ஆனால், அவர்களைப் படிக்க வைக்க பணம் இல்லை. புத்தகம், சீருடை வாங்கக் கூட காசில்லை.

பள்ளியில் இரண்டு சீருடைதான் கொடுக்கிறார்கள். அந்த சீருடையும் கிழிந்து விட்டது. தம்பி கிழிந்த சட்டையோடுதான் பள்ளிக்குச் செல்கிறான். அவனுக்கு எப்படியாவது, புதிய சட்டை வாங்கி கொடுக்கணும்னு நினைப்பேன். ஆனா வர்ற காசு குடும்பச் செலவுக்கே போதாது” என்று அந்தச் சிறுமி சொன்னபோது,

பிரதமர் நரேந்திரமோடி, தான் அணிந்திருந்த சால்வையை ஒரு பெண் கேட்டார் என்பதற்காக, அதனை அனுப்பிய செய்திதான் என் நினைவில் வந்து நின்றது.

அகதிகள் முகாம்”என் வீட்டிற்கு வாருங்கள்” என அந்தச் சிறுமி அவள் வீட்டைக் காட்டியபோது, மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது.

மிகவும் குண்டும், குழியுமாக நான்கு சவுக்குக் கம்புகள் மட்டுமே நடப்பட்டு, அதன் மேல் இருந்த கூரையில் கிழிந்த பாய்களும், எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடக் கூடிய நிலையில் சில காய்ந்த ஓலைகளும் போடப்பட்டிருந்தன. இந்த வீட்டில்தான் ஏழு பேர் வசிக்கிறோம் என்றாள்.

தொடர்ந்து, “எங்களை விடவும் அருகில் உள்ள கவுரி அக்காவின் வீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

அவர்களுக்கு அரசின் அகதிகள் உதவித் தொகைகூட கிடைப்பதில்லை. அரசாங்கம் அவர்களுக்கு உதவித்தொகை கொடுத்தால் ஓரளவுக்கு பிரச்சினை குறையும் என்று அவள் கூறியது நம்மை நெகிழ வைத்தது.

அந்தச் சிறுமியின் நிலையையும், அங்கு வசிக்கும் அகதிகளின் வாழ்வாதாரத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்த பின்னர், நம் மனம் மிகுந்த பாரத்துடன் பயணத்தைத் தொடர்ந்தது.

கும்மிடிப்பூண்டி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் கேட்பதெல்லாம், பெரிய வசதியான வாழ்க்கையோ, ஆடம்பர மாளிகைகளோ அல்ல

தாங்கள் அன்றாடம் பசியின்றி வாழவும், கடும் மழை, வெயிலில் இருந்து பாதுகாப்புடன் வசிக்கவும் ஏற்ற வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே.

மத்திய அரசு தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கினால் மகிழ்வோம்; அல்லது தங்கள் சொந்த நாட்டிற்குச் சென்று வாழ்க்கையை புதிதாகத் தொடங்க ஏதுவாக குறிப்பிட்ட உதவித் தொகையையாவது வழங்க வேண்டும் என்பதுதான்.

அரசு அவ்வாறு செய்தால் மட்டுமே, இந்த சமூகத்தில் எங்களாலும் கல்வி அறிவு பெற்றவர்களாக உயர முடியும் என்பதே இவர்களின் கண்ணீர்க் குரல்களாக ஒலிக்கிறது!

இந்தக் குரல்கள் மத்திய, மாநில அரசுகளின் காதுகளுக்கு கேட்குமா?

– Vikatan

TAGS: