‘விருந்துக்கு வாருங்கள், 1எம்டிபியைக் குறைகூறுவோரின் வாயை அடைக்க நல்ல வாய்ப்பு’- ஜொகாரிக்கு புவா அழைப்பு

dapடிஏபி  நாடாளுமன்ற  உறுப்பினர்   டோனி   புவா,   இரண்டாவது   நிதி  அமைச்சர்   ஜொகாரி   அப்துல்   கனியை    நிதிதிரட்டும்   விருந்து   ஒன்றுக்கு   அழைத்திருக்கிறார்.  அங்கு   வந்து   ஜோகாரி   1எம்டிபி   தொடர்பில்  அவர்   தரப்பு   வாதங்களை   எடுத்துரைக்கலாம்.

மே  6ஆம்   நாள்  நடைபெறும்  அவ்விருந்தில்    டிஏபி   நாடாளுமன்றத்    தலைவர்   லிம்  கிட்   சியாங்,    முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்,  பார்டி   அமனா  நெகாரா(அமனா)  தலைவர்   முகம்மட்  சாபு,   பிகேஆர்   உதவித்   தலைவர்  ரபிசி   ரம்லி   ஆகியோர்   உரையாற்றுவார்கள்   என்றாரவர்.

“அமைச்சர்  எங்கள்   வாயை   அடைப்பதற்கு   அது    ஒரு  நல்ல  வாய்ப்பு”,  என  புவா   ஓர்   அறிக்கையில்  கூறினார்.

கடந்த  வாரம்,  ஜொகாரி   அப்துல்  கனி,   புவாவுக்குத்    திறந்த   மடல்   ஒன்றை   வரைந்திருந்தார்   என்பது   குறிப்பிடத்தக்கது.    அதில்   1எம்டிபி  மீதான   தொடர்   தாக்குதலை   புவா   நிறுத்திக்கொள்ள   வேண்டும்   என்று    வலியுறுத்தியிருந்தார்.

புவா  நல்ல   காரியங்களைச்   செய்வார்   என்ற  நம்பித்தான்   பெட்டாலிங்  ஜெயா  வாக்காளர்கள்  அவருக்கு   வாக்களித்தார்கள்.  அவர்   அதை   மறந்து   1எம்டி்பி-  பித்துப்  பிடித்து  அலையக்கூடாது   என்றும்   அவர்  குறிப்பிட்டிருந்தார்.