“ஊர் கூடி ஊரணி காப்போம்” சாதித்து காட்டிய தூத்துக்குடி மக்கள் !

seemaikaruvelamaramதூத்துக்குடி: தூத்துக்குடியின் நீர் ஆதாரமான கோரம்பள்ளம் குளத்தை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றி குளத்தை மீட்டெடுத்துள்ள சுற்று வட்டார பகுதி மக்கள்.

தூத்துக்குடி நகரின் பூர்வீக நீர் ஆதாரமானது கோரம்பள்ளம் குளம். இது தாமிரபரணி வடிநில கோட்டத்தின் கடைசி குளமாகும். 1300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் சுற்றியுள்ள 12 கிராமங்களில் உள்ள இரண்டாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெற்று வந்தன. பல வருடங்களாக இந்த குளம் தூர்வாரப்படாமல் இருந்ததின் காரணமாக பன்னிரண்டு அடி கொள்ளளவு கொண்ட இந்த குளம் இப்போது தண்ணீர் தேக்க வைக்க முடியாத நிலையில் உள்ளது.

இதன் விளைவை கடந்த 2015 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் தூத்துக்குடி மக்கள் சந்தித்தனர். பல லட்சம் கனஅடி நீர் வீணாக கடலில் சென்று கலந்தது. தற்போது தூத்துக்குடி மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றனர். மேலும் தூத்துக்குடி நகரின் நிலத்தடி நீரின் அளவு அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருகிறது. இந்த அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு ஒத்த கருத்துடைய நண்பர்கள் சேர்ந்து “நன்செய்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

“ஊர் கூடி ஊரணி காப்போம்” என்ற அடைமொழியுடன் இந்த அமைப்பின் முதல் பணியாக தூத்துக்குடியின் நீர் ஆதாரமான கோரம்பள்ளம் குளத்தை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றி குளத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரின் முன் அனுமதி பெறப்பட்டது.

பின்னர் தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள், வியாபார சங்கங்கள், ரோட்டரி, லயன்ஸ், ஜே.சி.ஐ போன்ற அமைப்புகள், விவசாய சங்க பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் போன்ற பலரை ஒருங்கிணைத்து ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைவருடைய கருத்துகளையும் கேட்டறிந்து திட்டம் தயாரிக்கப்பட்டது.

முதல் கட்டமாக 480 ஏக்கரில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டு கோரம்பள்ளம் குளத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஊர் பொதுமக்கள், விவசாயிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், ஆண்கள், பெண்கள் என சுமார் 500 பேர் அணி அணியாக வரத்தொடங்கினர்.

பூஜைகள் நடத்தப்பட்டு அனைவரும் களத்தில் இறங்கி அவர்களாக கருவேல மரங்களை தூரோடு வெட்டி அப்புறப்படுத்தினர். 16 ஜே.சி.பி இயந்திரம் பணியில் அமர்த்தப்பட்டது. இந்த இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடியில் அமைந்துள்ள பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டன.

ஊர்கூடி செய்யும் காரியத்தை இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிக்குமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் பார்வையிட்டனர். கோரம்பள்ளம் குளத்தை தூர்வாரும் போது எடுக்கப்படும் மணலை விவசாய நிலத்திற்கு பயன்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் அப்போது எழுப்பினர்.

உடனே மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த கோரிக்கையை ஏற்று, நன்செய் அமைப்பு, விவசாயிகள், அரசு அதிகாரிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கி மணலை விவசாய பயன்பாட்டுக்கு எடுத்துகொள்ள அனுமதிக்க ஆவன செய்வதாக கூறினார். இந்த பதிலை கேட்ட விவசாயிகள் கரகோஷம் எழுப்பினர். மேலும் இந்த மணலை தனிநபர்கள் வியாபார நோக்கத்துடன் அள்ளிசெல்வதை தடுக்க இந்த கமிட்டி கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சீமைக்கருவேல மரங்கள் அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். சீமைக்கருவேல மரங்கள் முழுவதும் அப்புறப்படுத்தி முடிந்தவுடன் தூர்வாரும் பணி தொடங்கும். ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் பொதுமக்கள் அனைவரும் இந்த குளத்தில் வந்து கூடி தங்களால் முடிந்த உடல் உழைப்பை தந்து கோரம்பள்ளம் குளத்தில் நீர் ததும்பி நிற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என நன்செய் அமைப்பு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

விடுமுறை நாட்களை வீணாக்காமல் சாதனை நாளாக மாற்றும் கோரம்பள்ளம் பொதுமக்களின் வழியை அனைவரும் பின்பற்றுலாமே ..

tamil.oneindia.com

TAGS: