முதுகலை மாணவர் சித்தி நூர் ஆயிஷா மீண்டும் கைது

arrestமுன்னாள்  முதுகலைப்  பட்டப்படிப்பு  மாணவர்   சித்தி   நூர்   ஆயிஷா  பாதுகாப்புச்   சட்டத்தின் (சொஸ்மா)கீழ்   மீண்டும்  கைது   செய்யப்பட்டு   அவருடலில்  மின்னியல்   கண்காணிப்புக்  கருவி   ஒன்றும்  பொருத்தப்பட்டுள்ளது.

இத்தனையும்  நேற்று   அவர்   உயர்  நீதிமன்றம்   சென்றபோது   நிகழ்ந்தது. கடந்த   ஆண்டு    செப்டம்பர்   மாதம்   12  நூல்களை   வைத்திருந்த   குற்றச்சாட்டிலிருந்து  அவரை   உயர்  நீதிமன்றம்  விடுவித்திருந்ததை   எதிர்த்து  அரசுத்   தரப்பு   செய்திருந்த   மேல்முறையீட்டு   விசாரணைக்காக   அவர்   நேற்று  நீதிமன்றம்   சென்றிருந்தார்.

இதற்குமுன்  அவர்  குற்றச்செயல்   தடுப்புச்  சட்டம்  (பொகா) 1956-இன்கீழும்  தடுத்து  வைக்கப்பட்டிருக்கிறார்.

“அந்த   வகையில்,  குற்றவாளி   என்று  நிருபிக்கப்படுவதற்கு  முன்பே   அவர்  மீண்டும்  மீண்டும்   தடுத்து  வைக்கப்பட்டிருக்கிறார்.  இது   தீர்ப்புக்கு  முன்பே   தண்டிப்பதற்கு  ஒப்பாகும்.  சொஸ்மாவையும்  பொக்காவையும்  ஒருசேரப்   பயன்படுத்துவதால்   வந்த  வினை  இது”,  என்று  அவரின்    வழக்குரைஞர்  முகம்மட்  கமருல்சமான்  ஏ.வகாப்    மலேசியாகினியிடம்   கூறினார்.

சித்தி  நூர்  ஆயிஷா ,29,     பயங்கரவாதம்   தொடர்பான   நூல்களைக்  கைவசம்   வைத்திருந்ததற்காக,      கடந்த   ஆண்டு   மார்ச்  மாதம்     குற்றவியல்    சட்டம்    பிரிவு   130-இன்கீழும்   சொஸ்மாவின்  கீழும் முதன்முதலாகக் கைது செய்யப்பட்டார்.

அடுத்த  மாதமே  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டுக்  குற்றஞ்சாட்டப்பட்டார்.  அவர்  குற்றத்தை  மறுக்கவே    வழக்கு   தொடரப்பட்டது.

இதனிடையே,     கைது   செய்யப்பட்டதும்   வகுப்புகளுக்கு   வராததால்   மலாயாப்  பல்கலைக்கழகத்திலிருந்தும்    அவர்  விலக்கப்பட்டார்.

சித்தி   நூர்  ஆயிஷா   முதுகலைப்  பட்டப்படிப்பு  ஆராய்ச்சிக்காக       அந்த   நூல்களை  வைத்திருந்ததாகக்  கூறினார்.

அவர்  வைத்திருந்த  எந்த  நூலும்      தடை   செய்யப்பட்ட   நூல்   அல்ல   என்று  கமருல்சமான்  குறிப்பிட்டார்.

கடந்த  ஆண்டு   செப்டம்பரில்   உயர்   நீதிமன்றம்   அவரைக்  குற்றஞ் சாட்ட  போதுமான   ஆதாரங்கள்  இல்லை    என்று  கூறி  விடுவித்தது.

விடுவிக்கப்பட்ட  அன்றே    சித்தி   நூர்  ஆயிஷா  மீண்டும்   கைது   செய்யப்பட்டு    பொகாவின்கீழ்   60  நாள்களுக்குத்   தடுத்து   வைக்கப்பட்டார்.

அதிலிருந்து  வெளிவந்ததும்   வீட்டுக்காவலில்   வைக்கப்பட்டு   மின்னியல்  கண்காணிப்புக்  கருவியும்   பொருத்தப்பட்டது.போலீஸ்   அனுமதியின்றி   அவர்   திரெங்கானு,  டுங்குன்    சூரா  மாவட்டத்தை   வெளியேறத்  தடை  விதிக்கப்பட்டது.

இப்போது  மீண்டும்  கைது   செய்யப்பட்டிருக்கிறார்.